எத்தனையோ முறை பார்த்த கதைகளையும், பார்த்த கதாபாத்திரங்களையும் பார்த்து அலுத்துப் போன நமக்கு சில வித்தியாசமான, இதுவரை பார்க்காத கதாபாத்திரங்களையும், கதைகளையும் பார்க்கும் போதுதான் உண்மையான வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.
எந்தப் படத்திலிருந்து தழுவினாலும், அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் கொடுக்கக் கூடிய இயக்குனர் விஜய். இந்த ‘வனமகன்’ படத்தைப் பார்க்கும் போது சில ஆங்கிலப் படங்கள், எப்போதோ வந்த ஒரு சில தமிழ்ப் படங்களின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்றாலும் படத்தை ரசிக்க முடிகிறது.
மிகப் பெரும் கோடீசுவரியான சாயிஷா, நண்பர்களுடன் அந்தமானுக்குச் செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியை தன் கார் மூலம் மோதி விபத்து ஏற்படுத்திவிடுகிறார். அடிபட்ட அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சிகிச்சை செய்து தன்னுடன் தங்க வைத்து விடுகிறார். காட்டு வாசியான ஜெயம் ரவியை, அந்தமான் போலீசும், வனத்துறையும் சேர்ந்து தேடுகிறார்கள். இதனிடையே சாயிஷாவுக்கும் அவருடைய கார்டியன் ஆன பிரகாஷ்ராஜ் மகன் வருணுக்கும் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அந்தப் பிரச்சனையில் வருணை அடித்துத் தாக்குகிறார் ஜெயம் ரவி. ஒரு வழியாக ஜெயம் ரவி சென்னையில் இருப்பதைக் கண்டுபிடித்து மீண்டும் அவரை அந்தமானுக்கு அழைத்து வருகிறார்கள். ஜெயம் ரவியைத் தேடி சாயிஷா அந்தமான் வருகிறார். சாயிஷாவைத் தேடி பிரகாஷ்ராஜும் வருகிறார். அடுத்து என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காட்டு வாசியாக இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசக் கூடிய கதாபாத்திரத்தில், தன் உடல் மொழியாலும், முகபாவனைகளாலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் படத்துக்குப் படம் இப்படிப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஜெயம் ரவியை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்வது உறுதி.சாயிஷா, தமிழ் சினிமாவில் மற்றுமொரு அழகிய அறிமுகம். கூடவே அசத்தலான நடனத் திறமை வேறு. இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு தமிழ் சினிமா சாயிஷா புகழ் பாடிக் கொண்டிருக்கும்.தம்பி ராமையா படம் முழுவதும் வருகிறார். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ் வழக்கமான வில்லன், பெரிய வாய்ப்பில்லை இந்தப் படத்தில். இவர் மகனாக பணக்கார இளைஞனாக வருண். கொஞ்சமே வந்தாலும் சண்முகராஜன் கண் கலங்க வைக்கிறார். அந்தமான் போலீஸ் கதாபாத்திரத்தில் சாம் பால் நடிப்பு மிடுக்கு.
ஜி.வி.பிரகாஷ் குமார் – நா.முத்துக்குமார் கூட்டணியை ரொம்பவே மிஸ் செய்கிறார் இயக்குனர் விஜய். இந்தப் படத்தில் ஹாரிஸ் – கார்க்கி கூட்டணி இன்னும் உழைத்திருக்கலாம். இப்படிப்பட்ட படங்களுக்கு பாடல்கள்தான் ஹைலைட்டாக அமைய வேண்டும். ‘பச்சை உடுத்திய காடு’ பாடல் மட்டும் பச்சக் என்று பற்றிக் கொள்கிறது. திருவின் ஒளிப்பதிவு காட்டின் இயற்கை அழகை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.முதல் பாதி சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பின் கதை அந்தமான் நகர்ந்ததும் தள்ளாடிக் கொண்டே செல்கிறது. எந்த ஒரு டிவிஸ்ட்டும் இல்லாமல் வெறும் தேடலுடன் மட்டும் நகர்வது சுவாரசியத்தைத் தேய்த்து விடுகிறது.