19.7 C
New York
Wednesday, October 9, 2024

Buy now

spot_img

“Thodraa’ will be a mile stone for Prithvi-Actor Barath

வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
 
பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன்,  கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
 
தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், 

​ மீரா கதிரவன், ​

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன்,  நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன்,  அரீஷ் குமார்,

​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​

 ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். 

.    
நடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள்.. உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது... அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். 
 
நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும்.. இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.
 
படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மைனா சூசன் பேசும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஓர் ஆண் இருப்பார்கள்.. அந்தவகையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் வெற்றிக்கு அவரது கணவர் குமார் முக்கிய காரணம்.. ஒரு நடிகராக தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காட்சியில் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் கொடுத்துள்ளார்” என்றார் ஜாலியாக..
 
அடுத்தாக பேசியவர்களில் இயக்குநரும் பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஆர்கே.செல்வமணி திரையுலகம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் சற்று சீரியஸாகவே பேசினார்.. “கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.. பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள். ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம். தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள். 
 
ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.. இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை. சினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய்  கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்..? பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை..
 
எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான். இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.. தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார் மிக நீண்ட சொற்பொழிவாக
 
அடுத்ததாக பிரபல இயக்குநரும் இந்தப்படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.
 
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “ஒரு பெண் தயாரிப்பாளர் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறாரே என ஆரம்பத்தில் நான் சங்கடப்பட்டேன்.. ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையை பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இந்தப்படத்தின் நாயகன் பிருத்வி, உடம்பை எப்படி பிட்டாக வைத்துக்கொள்வது என்பதை பரத்திடம் இருந்து கற்றுக்கொண்டால் காலம் முழுக்க நிலைத்து நிற்கலாம். இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதுபோல டைட்டில் பிரச்சனை இருக்கவே செய்கிறது, சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் இருந்து, எங்கள் சங்கத்திலேயே டைட்டிலை பதிவு செய்துகொள்கிறோம் என வேகமாக புறப்பட்டார்கள்.. ஆனால் அதன்பின் என்ன ஆனதோ, அந்த விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.. நாளையே கூட அந்த முயற்சியைத் தொடங்கி, சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கும் முடிவு கட்டலாம். அதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.   
 
படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார்.. இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது.. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..  
 
அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள். படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.. டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்றார்.. 
 
தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் பேசும்போது, “என் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராக பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன்.. என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்கு செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை.. இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக  நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்.. எனக் கூறினார்.
 
நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்... பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது.. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது.. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன்.. அதற்குப்பின் அந்த வாய்ப்பு  பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும்.. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார்.. அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்.. சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்...

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE