போலீஸ் இன்ஸ்பெக்டர் ருத்ரபிரபா கரன் (ரிச்சர்டு) இடமாற்றலாகி ராயபுரம் பகுதி போலீஸ் நிலையத்துக்கு வருகிறார். அப்பகுதியில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உயர் அதிகாரி ஆணையிடுகிறார். அதன் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும் அவர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ரூ 200 கோடி மதிப்பிலான போதை பொருளை கைப்பற்றுகிறார். அதனை கடத்திய வாதாபிராஜன் (கவுதம்மேனன்)ருத்ரனிடம் பேரம் பேசுகிறார். அவரும் அதற்கு உடன்படுவதுபோல் செயல்பட்டு மொத்த போதை பொருளையும் தீயிட்டு அழிக்கிறார். இதனால் கோபம் அடையும் வாதாபி பழிவாங்க தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கஞ்சா விற்கும் இரண்டு இளைஞர்களை பிடிக்க செல்லும் ருத்ரன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கும்அவர்களை காலில் எட்டி மிதித்து தள்ளி பிடிக் கிறார். இதில் மாறன் என்ற இளைஞனுக்கு தலையில் அடிபடு கிறது. அவனை ருத்ரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். ஒரு கட்டத்தில் மாறன் இறந்துவிடுகிறான். அதையறிந்த வாதாபி இதுதான் ருத்ரனை பழிவாங்க கிடைத்த சந்தர்ப்பம் என்று எண்ணி அவரை ஜாதி ரீதியாக சிக்கலில் மாட்டிவிடுகிறார். ஜாதி வன்மத்தை மனதில் வைத்துத்தான் மாறனை ருத்ரன் கொன்றதாக ருத்ரன் மீது புகார் தரப்படு கிறது. அதன்பேரில் ருத்ரன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தனது செயலில் ஜாதி வன்மம் எதுவும் இல்லை, தன்னால் மாறன் இறக்க வில்லை என்று வாதம் செய்கிறார் ருத்ரன். அவருக்காக பட்டியலின வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுகிறார். ஜாதி வன்கொடுமை சட்டத்தில் சிக்க வைக்கப்பட்ட ருத்ரன் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை சட்ட ரீதியாக அலசி விளக்குகிறது படம்.
பெரிய பெரிய நடிகர்களும் புரட்சி இயக்குநர்கள் மாஸ் இயக்குநர்கள் சமூகப்படம் எடுப்பவர்கள் என்று எவரும் தொடாத ஒரு சிகரத்தை முதன்முதலாக தொட்டிருக்கிறார் மோகன் ஜி.
காக்கி சட்டை மக்களை காப்பாற்றுவதற்குத்தான் என்கிற தீர்க்கமாக நம்பிக்கையுடன் ஆக்ரோஷமான காலவ்துறை அதிகாரியாக புலிப்பாய்ச்சல் காட்டும் ரிச்சர்ட், ஒரு அப்பாவி சிறுவனின் மரணத்திற்கு நாம் காரணமாகிவிட்டோமோ என்று அப்படியே நொறுங்கிப்போகிறார். உண்மையில், அவர் தான் காரணமா..? என்கிற முடிச்சை அவிழ்ப்பது தான் விறுவிறுப்பான இரண்டாம் பாதி.
களைகள் களையப்பட அனைத்து மத சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தான் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்களது சுயலாபங்களுக்காக ஒரு நேர்மையான அரசு இயந்திரத்தை முடக்கிப்போடுவதற்காக மூன்றாம் தர அரசியல்வாதிகள் சாதிப்பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள்.
மதமாற்ற கும்பலுக்கு அப்படிப்பட்ட மூன்றாம் தர அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. மக்களை நாசமாக்கும் போதைப்பொருட்கள் என்கிற விஷத்துடன், அதற்கு சற்றும் குறைவில்லாத வணிக ரீதியான மதமாற்றங்களை இணைத்து திரைக்கதை அமைத்த விதம் அருமை.
பி சி ஆர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் குற்றங்களை தடுப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். தமிழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சமூகவிரோதிகள் கைதுசெய்யப்பட்டதும் , அச்செயல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான காவல்துறையினரின் அடக்குமுறை என்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கட்சியின் நிர்வாகி கூக்குரல் இட்டதும் நினைவிருக்கலாம்.
அதைப்போலவே, இந்துவாக இருந்து கிறுத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்களின் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவேண்டியதன் அவசியத்தை இப்படம் சொல்கிறது. இந்துப்பெயருடனே கிறுத்துவர்களாக இருந்துகொண்டு உண்மையாக தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையும் உரிமைகளையும் கிரிப்டோ கிறுத்துவர்கள் என்று அழைக்கப்படும் அவர்கள் தட்டிச் செல்வது வெட்கக்கேடு. கிரிப்ட்டோ கிறுத்துவர்களாக இருந்துகொண்டு இந்துமதத்திற்கு எதிராக செயல்படும் பலர் நம் நாட்டில் அதிகாரிகள் முதல் எம் எல் ஏக்கள் அமைச்சர்கள் என்று முதலமைச்சர்கள் வரை இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
அப்படிப்பட்ட கிரிப்ட்டோக்களின் முகத்திரைகளை கிழிக்கும் படமாக ருத்ர தாண்டவம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
நான் பட்டியலினத்தவன் தான் ஆனால் என் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படம் இருக்கிறது.
அம்பேத்கர், ஒரு குறிப்பிட்ட சாதிக்காக சட்டம் இயற்றவில்லை. அவர் தேசத்தந்தையாக கொண்டாடப்படவேண்டியவர், அனைவருக்குமானவர்.
இந்துமதத்தில் இருந்து மதம் மாறிவிட்டாலே தாழ்த்தப்பட்ட என்கிற அந்தஸ்தை இழக்கிறார்கள் எனும்போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாவலாக இருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்த தகுதியற்றவர்களாகிறார்கள்.
பிறக்கும் போது இந்துவாகப் பிறந்தேன், சாகும்போதும் அப்படியே செத்துவிடுகிறேனே...
என்று படம் முழுவதும் பட்டை தீட்டியது போல கூரான வசனங்கள்.
அருமையான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, நாட்டிற்கு தேவையான சிறந்த கருத்தை சொல்லும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக ருத்ர தாண்டவம் .
ஜோசப் என்கிற கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமையா அப்படியே வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒப்பனை மற்றும் உடைகள், உடல்மொழிகள் அடுத்த தலைமுறைக்கு ஒரு ref ஆக நடித்து பாராட்டுகளை பெறுகிறார்.
வில்லனுக்கு இவரை விட வேறு யாரும் பொருந்தியிருக்க மாட்டார்கள். ஸ்டைலான மென்மையான ரொமாண்டிக் படங்களை எடுக்கும் இவரா இப்படி மிரட்டியிருக்கிறார் எனும் அளவிற்கு, கௌதம் வாசுதேவ மேனன் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அண்ணாமலை ஐ பி எஸ் என்கிற காவல்துறை உயரதிகாரியாக எந்தவிதமான செயற்கைத்தனங்களும் இல்லாத நடிப்பில் கவனமீர்க்கிறார் ஜே எஸ் கே கோபி.

படத்திற்கு பெரிய பங்களிப்பாக ராதாரவியின் கதாபாத்திரம். மனிதர், நெற்றியில் திருநீறுடன் பட்டியல் இனத்திலிருந்து படித்து முன்னேறிய நியாயமான வழக்கறிஞர் ஆக அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஒய் ஜி மகேந்திரா ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அருமையான நடிப்பு.
நீதிபதியாக வரும் மாளவிகா, நீதிபதின்னா இப்படி இருக்கனும்பா என்கிற அளவிற்கு சிறப்பாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
ரிச்சர்ட், கமர்ஷியல் மாஸ் நடிகராக வலம் வரத்தகுதியானவன் என்பதை ருத்ர தாண்டவமாடி சொல்லியிருக்கிறார்.
ஒளிப்பதிவும் இசையும் அருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் ஜுபின், பாடல்களுக்கான இசையிலும் குறிப்பாக பின்னணி இசையிலும் தனி ஆவர்த்தனம் ஆடியிருக்கிறார்.