தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆக்ஷன் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இதுவரை பார்க்காத கதை, கதைக்களம் கொண்ட படங்கள்தான் ரசிகர்களுக்குத் திருப்தியையும் தருகின்றன.
இந்தப் படத்தில் அப்படி ஒரு வித்தியாசத்தைத் தர அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முயற்சித்திருக்கிறார். அதை இன்னும் கவனத்துடன் கொடுத்திருந்தால் மிகப் பெரும் வெற்றிப் படத்துக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பார். ஆனால், சில தேவையற்ற காட்சிகளால் அந்த வெற்றிக் கோட்டையை அவரே கோட்டை விட்டுவிட்டார்.
பர்மாவிலிருந்து சென்னைக்கு அகதியாக வந்த குடும்பம் கௌதம் கார்த்திக் குடும்பம். வட சென்னையில் உள்ள சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். ஒரு பணத் தேவைக்காக கடத்தல் தங்கம் ஒன்றை பர்மாவுக்கு அனுப்பும் வேலையை கௌதமிடம் கொடுக்கிறார் சித்திக். பர்மாவில் தங்கத்தை ஒப்படைத்து பணத்தையும் வாங்கிக் கொள்கிறார் கௌதம். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பணம் கௌதமிடம் இருந்து காணாமல் போகிறது. அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ஒரு கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார் கௌதம். அதன் பின் அவர் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் நடைபெறுகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இதற்கு முந்தைய படங்களில் வெற்றிக்காக உழைத்த (?) கௌதமிற்கு அது கிடைக்கவேயில்லை. இந்தப் படத்தில் ஓரளவிற்கு கரை சேர்கிறார். ஆனாலும், நடிப்பிற்கு கண்கள் தான் மிகவும் முக்கியம். ஆனால், கௌதம் பல காட்சிகளில் கண்களைத் திறந்து கொண்டுதானிருக்கிறாரா என்பது சந்தேகமாக உள்ளது. இருந்தாலும் முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
படத்தின் நாயக சனா-தான் அடுத்த சிம்ரன் என படத் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே சொல்லியிருந்தார். சிம்ரன் இடமெல்லாம் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது என்பது சனாவுக்குப் போகப் போகப் புரியும். வெறும் அழகு மட்டுமே சினிமாவில் ஜெயிக்கப் போதாது.
வில்லன் சித்திக், கௌதம் நண்பர்கள் டேனியல், லல்லு ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் கதையில் காதல் காட்சிகள், பாடல்கள் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். வசனங்கள் மூலம் சில காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார் இயக்குனர்.