இனிகோ பிரபாகரன், யோகி பாபு, ரமேஷ் திலக், செங்குட்டுவன், ஸ்ரீ பிரியங்கா, அனிஷா மற்றும் பலர் நடிப்பில் ரகுநந்தன் இசையில் ஐயப்பன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பிச்சுவா கத்தி ஒரு தவறு செய்யபோகி அதனால் ஏற்படும் விபரீதம் தான் இந்த படத்தின் ஒன லைன் கதை
வெட்டித்தனமாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ இனிகோ பிரபாகரிடம், ஹீரோயின் ஸ்ரீ பிரியங்கா காதலை சொல்ல, குஷியாகும் இனிகோ, தனது நண்பர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோருடன் சேர்ந்து சரக்கு அடித்துவிட்டு, போதையில் ஆடு ஒன்றை திருட முயற்சிக்கும் போது ஊர் மக்களிடம் சிக்கிக்கொள்ள, அவர்கள் போலீசிடம் பிடித்துக்கொடுத்து விடுகிறார்கள். ஒரு மாதம், தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது.
கையெழுத்து போட போகும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர், தலைக்கு ரூ.10 ஆயிரம் என்று 30 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோசமானவர் என்று கேள்விப்படும் மூன்று நண்பர்களும் பணத்தை குறுக்கு வழியில் ரெடி பண்ண திட்டம் போட்டு, அனிஷாவிடம் தங்க சயினை பறிக்க முயற்சிக்கும் போது, சிக்கிக்கொண்டு அவமானப்படுகிறார்கள். பிறகு பணத்தை திருடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க, மூவரையும் மேலும் சில தவறுகளை செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தூண்டுகிறார். இதனால், அந்த ஊரில் உள்ள தாதா ஒருவர் சொல்லும் வேலைகளை செய்துவரும் மூன்று நண்பர்களும் ஒரு கட்டத்தில் கொலை செய்யவும் துணிந்துவிடுகிறார்கள்.
இதற்கிடையே, படத்தின் மற்றொரு ஹீரோவான செங்குட்டுவன் – அனிஷாவின் காதல் கதை ஒரு பக்கம் பயணிக்க, தன்னை மக்கள் முன்னிலை அசிங்கப்படுத்திய அனிஷாவை பழிவாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் இனிகோ பிரபாகரன், ஊரில் தனக்காக காத்திருக்கும் தனது காதலியை கரம் பிடிக்கவும் ஆசைப்படுகிறார். இந்த 30 நாட்களை கடந்துவிட்டு, ஊருக்கு செல்ல வேண்டும் என்று இருக்கும் மூன்று பேரையும், தொடர்ந்து தங்களுக்கு வேலை செய்யும்படி ரவுடியும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வற்புறுத்த அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆனார்களா இல்லையா? என்பது தான் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் கதை.
ஹீரோ இனிகோ பிரபாகரன் என்றாலும், படத்தில் நடித்த யோகி பாபு, ரமேஷ் திலக், செங்குட்டுவன் என அனைத்து நடிகர்களும் படம் முழுவதும் வருவதோடு, அனைவருக்கும் சமமான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுக நடிகரான செங்குட்டுவன், அனுபவ நடிகர்களான இனிகோ, யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோருடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார். ஸ்ரீ பிரியங்கா, அனிஷா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், அனிஷாவுக்கு தான் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அம்மணியும் அப்ளாஸ் வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
யோகி பாபு, பால சரவணன் என இருவரும் காமெடி ஏரியாவை கவனித்தாலும், அந்த ஏரியா ரொம்ப ட்ரையாகவே இருக்கிறது. யோகி பாபுவின் சில உலறல்களுக்கு மட்டும் ஒரு சிலர் கொஞ்சமாக சிரிக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இல்லை என்பது தான் சோகம். ஏதோ கடமைக்கு இசையமைத்தது போல சுமாரான இசையை தான் மனுஷன் கொடுத்திருக்கிறார். கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் ஒத்துழைத்துள்ளது.
இனிகோ பிரபாகரன், யோகி பாபு, ரமேஷ் திலக் இவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிக்கொண்டு சிரமப்படுவதையும், பிறகு அங்கிருந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆகிறார்கள், என்ற போஷனை மட்டுமே திரைக்கதையாக்கி இருந்தாலே படம் பாராட்டு வாங்கியிருக்கும். ஆனால், இயக்குநர் ஐயப்பன் அதை விட்டுவிட்டு, செங்குட்டுவன் – அனிஷா ஆகியோரது காதல் எப்பிசோட்டை நுழைத்ததுடன், அனிஷாவை இனிகோ பழிவாங்க துப்படிப்பது போல திரைக்கதையை வடிவமைத்து, இறுதியில், எதையுமே ஒழுங்காக சொல்லமல் படத்தை முடிக்கிறார்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் தவறு செய்யும் மூன்று பேரையும் தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனில் தான் கையெழுத்து போட சொல்வார்கள். ஆனால், இயக்குநர் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வைத்திருப்பது, ரசிகர்களின் காதில் வாழைப் பூவை வைத்தது போல இருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டரின் தூண்டுதலின் பேரில் ஒரு தவறை செய்துவிட்டு பிறகு தொடர்ந்து தவறுகள் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் மூன்று பேரும், ரவுடியின் அடியாட்களாவதுடன் கொலை செய்யும் அளவுக்கு போவது போல திரைக்கதை நகரும் போது, இந்த மூன்று பேரின் வாழ்க்கையும் என்னவாகும்?, இனிகோ – ஸ்ரீ பிரியங்காவின் காதல் என்னவாகும்? என்ற எதிர்ப்பார்ப்பு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், மொட்டை ராஜேந்திரனின் அமைச்சர் காமெடி, அவரிடம் இருந்து வைரம் கடத்தல், என்று பழைய காட்சிகளை வைத்து இயக்குநர் நல்லா போன திரைக்கதையை ஒரு கட்டத்தில் நாசமாக்கி விடுகிறார்.
படத்தின் முதல் பாகத்தில் ‘பிச்சுவா கத்தி’ யை கூர்மையான கத்தியாக காண்பிக்கும் இயக்குநர், இரண்டாம் பாதியின் போது, கூர்மை இல்லாத கத்தியாக்குவதுடன், எதுக்கும் உதவாத அட்டை கத்தியாகவும் மாற்றிவிடுகிறார்.