பல வெற்றிப் படங்களை கொடுத்த சரண் இயக்கத்தில், வினய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.
செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், அம்மாவின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று போட்டிக்கொண்டு பிறக்கிறார்கள். வளரும் போதும் அதே மோதலுடனே வளரும் இவர்களில் ஒரு வினய், பங்காளி பகையால் செய்யப்பட்டுவிட்டதாக அவரது பெற்றோர் நினைக்க, அந்த கோபத்தில் வினயின் அப்பா, தனது பங்காளியை போட்டு தள்ளிவிட்டு ஆந்திராவில் தலைமறைவாகி விடுகிறார். அதே ஆந்திராவில் உயிரிழந்துவிட்டதாக நினைத்த தனது மகனையும் சந்திக்கும் அவர், தனது மகன் உயிருடன் இருப்பது பங்காளி குடும்பத்திற்கு தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்பதால், தன்னுடனேயே வினயை ஆந்திராவில் தங்க வைத்துக்கொள்வதுடன், அந்த விஷயத்தை தனது மனைவி உள்ளிட்ட யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
இப்படி அம்மாவிடும் ஒரு வினய், அப்பாவிடம் ஒரு வினய் என்று வளரும் வினய்கள், வளர்ந்து பெரியவர்களானவுடன் காதல் கசமுசா என்று இருப்பதோடு, தனது குடும்ப சொத்தை கைப்பற்றவும் நினைக்கிறார்கள். செந்தட்டிக்காளை உயிரோடு இருப்பது தெரியாமல் சொத்து அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றம் செய்ய செவத்தக்காளை முயற்சிக்க, அந்த செவத்தக்காளையை தனது சூழ்ச்சியின் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் செந்தட்டிக்காளை, செவத்தக்காளையாக வந்து சொத்தக்களை அபேஸ் செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையே வினய்களின் குடும்ப பகையாளியான போலீஸ் இன்ஸ்பெக்டர், கள்ள நோட்டு விவகாரத்தில் வினயை சிக்க வைப்பதுடன், சொத்துக்களை அபகரித்துக்கொண்டு கொலை செய்யவும் திட்டமிடுகிறார். இந்த பிரச்சினை போதாது என்று ஆந்திராவில் இருந்து ஒரு பிரச்சினை வர, கூடவே மதுரையில் இருந்தும் ஒரு பிரச்சினை வருகிறது.
தங்களுக்குள்ளேயே கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இந்த இரட்டை சகோதர்களுக்கு, எதிராக மேலும் பல பிரச்சினைகள் கிளம்ப, அவற்றில் இவர்கள் சிக்கி சிதைந்தார்களா? அல்லது பிரச்சினைகளை தீர்த்துவிட்டு திருந்தினார்களா? என்பதே ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் மீதிக்கதை.
எங்கள் வீட்டுப் பிள்ளை, பாணி ஆள்மாராட்டம் செய்யும் இரட்டை வேட ஹீரோ சப்ஜட்க் தான் படத்தின் கதை என்றாலும், அதற்கு சரண் அமைத்திருக்கும் திரைக்கதையும், கிளைக்கதைகளும் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.