வட்டி தொழில் செய்யும் மார்வாடியின் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் அவர் நிறுவனத்தில்
பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களை சைக்கோ ஒருவர் எரித்து வர, அந்த சைக்கோவை பிடிக்கும்
பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்வந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. சைக்கோவை பிடிக்க களத்தில்
இறங்கும் ஜெய்வந்த், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, வாகனங்களை எரிக்கும் அதுவும் குறிப்பிட்ட
ஒரு நிறுவனத்தின் வாகனங்களை மட்டும் எரிக்கும் சைக்கோவின் பின்னணி, அவர் யார்? என்ற
சஸ்பென்ஸ்களுக்கான விடை தான் ‘காட்டுப்பய சார் இந்த காளி’ படத்தின் கதை.
போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஹீரோ ஜெய்வந்த், படத்தின் டைடிலுக்கு ஏற்றவாறும்
தோற்றத்தில் காட்டுத்தனத்தை கச்சிதமாக காட்டியிருக்கிறார். தனது வேடத்தை உணர்ந்து நடித்திருப்பவர்,
பல இடங்களில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டும் நடித்திருக்கிறார். ஐரா படத்தின் ஹீரோயினாக அல்லாமல்
கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ்,
மாரிமுத்து அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும், படத்தில் சம்மந்தம் இல்லாத பல விஷயங்களை இயக்குநர்
யுரேகா பேசுகிறார். தமிழர்களுக்காக தனது படத்தில் அவர் குரல் கொடுத்தாலும், அதை இந்த படத்தில்
செய்திருப்பது தேவையில்லாததாகவே தோன்றுகிறது. இருப்பினும், லோன் என்ற பெயரில் வங்கிகள்
மக்களிடம் எப்படி கொள்ளையடிக்கிறது என்பதை பேசியிருக்கும் இயக்குநர் யுரேகாவை பாராட்டியாகவே
வேண்டும்.
சைக்கோ எதர்காக வாகனங்களை எரிக்கிறார், அவர் யாராக இருப்பார், என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை
ஏற்படுத்துவதோடு, சைக்கோவின் விஷயத்தில் கையாளப்பட்டிருக்கும் ட்விஸ்ட் எதிர்ப்பார்க்காத ஒன்றாக
இருந்தாலும், படத்தை சஸ்பென்ஸ் படமாக கையாளாமல், பிரச்சார படமாக கையாண்டிருப்பது படத்திற்கு
பலவீனமாக அமைந்திருக்கிறது.