நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவர் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகி வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் யேசுதாஸ் அவரது உறவுக்கார பெண்ணான நாயகி அம்ரிதாவை காதலித்து வருகிறார். அதேநேரத்தில் போலீஸ் வேலை மீது விஜய் யேசுதாஸுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. போலீஸானால் மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு என ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் போலீசாக முயற்சி செய்கிறார்.
அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார். அவரும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விஜய்க்கு உதவி செய்து, தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறார். பிறகு பயிற்சியில் மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக போலீசாகி விடுகிறார்.
ஆனால், பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை முற்றி கலவரமாக மாறி விடுகிறது. போலீசாக இருந்து இரண்டு ஊர் பிரச்சனைகளை தீர்க்க போராடும் விஜய் யேசுதாஸ், கடைசியில் ஜாதி பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? விஜய் யேசுதாஸ் – அம்ரிதா இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஏற்கனவே மாரி படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் யேசுதாஸ் இந்த படத்தில் நாயகனாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞனாக படித்துவிட்டு ஊர் சுற்றுவது, குடித்து விட்டு சேட்டை செய்வது என முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாகவும் நிமிர்ந்திருக்கிறார். துணிச்சலான பெண்ணாக அம்ரிதா மனதில் நிற்கிறார். காதல் காட்சியில் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.
எக்ஸ் மிலிட்ரி மேனாக வரும் பாரதிராஜா, அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது கிண்டல் கலந்த பேச்சு ரசிக்கும்படியாக இருக்கிறது. செல்பி எடுக்கும் காட்சி, வசனம் பேசும் காட்சி என ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இரண்டு ஊருக்குள் நடக்கும் ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தனா. இதுபோன்ற கதைகள் பல வெளியானாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதை வலுவில்லாமல் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படத்தை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதுபோல் பின்னணி இசையையும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி இருக்கிறது.