கதாநாயகன் - அளந்து அளந்து சிரிக்க வைக்கிறார்கள்.
எப்போதோ ஒரு முறைதான் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களும், கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களும் வருகின்றன.
இந்தப் படத்திற்கு எதற்காக ‘கதாநாயகன்’ எனப் பெயரை வைத்தார்கள் என படத்தின் இயக்குனரைத்தான் கேட்க வேண்டும். படத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகர்கள் புரியும் ‘ஹீரோயிசம்’ படத்தில் துளியும் இல்லை. படத்தின் கதாநாயகனும் ஒரு பயந்த சுபாவம் உள்ள இளைஞன்தான். ஆரம்பத்திலிருந்து கதாநாயகனாக இல்லாமல் கிளைமாக்சில் கதாநாயகன் கொந்தளித்து எழுவதால் ஒருவேளை பொருத்தமாக இருக்கும் என நினைத்து வைத்திருக்கலாம்.
அறிமுக இயக்குனர் முருகானந்தம் ஒரு யதார்த்தமான கதையை யோசித்திருக்கிறார். கதையை யோசித்த அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதையையும், கொஞ்சம் சுவாரசியமான காட்சிகளையும் சேர்த்திருந்தால் இந்த கதாநாயகன் இன்னும் அதிக கைதட்டல் வாங்கியிருப்பான்.
தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ.ஆக வேலை பார்க்கும் விஷ்ணு விஷால் பயந்த சுபாவம் உள்ளவர். எந்த வம்பு சண்டைக்கும் போக மாட்டார். யாராவது நடு ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கூட வேறு பக்கம் ஓடி விடுவார். அப்படிப்பட்டவருக்கு கேத்தரின் தெரேசாவைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. குடும்ப சகிதமாய் கேத்தரின் வீட்டிற்குப் போய் பெண் கேட்கிறார்கள். ஆனால், கேத்தரினின் அப்பா நட்ராஜ், தனக்கு வரும் மருமகன் ‘அநியாயத்தைத் தட்டிக் கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தட்டிக் கேட்டு அடி வாங்கும் வீரனாக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவனுக்குத்தான் பெண்ணைக் கொடுப்பேன் என விஷ்ணு குடும்பத்தாரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
காதலுக்காக, மாமனார் போடும் கண்டிஷனுக்காக விஷ்ணு விஷால் வெகுண்டு எழுந்து ஹீரோயிசம் செய்து கதாநாயகன் ஆகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
விஷ்ணு விஷால், இந்தப் படத்திலும் அவருக்குப் பொருத்தமான நடுத்தரக் குடும்பத்துக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்துள்ளார். படத்திற்குப் படம் அவருடைய நடிப்பில் மெருகேறிக் கொண்டே போகிறது. இந்தப் படத்தில் சின்னச் சின்ன முக பாவங்களைக் கூட அருமையாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக, கேத்தரினுடன் நடிக்கும் காதல் நடிப்பில் எல்லாம் அவ்வளவு அற்புதமாக ஸ்கோர் செய்கிறார். விஷ்ணுவின் முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் அவருக்கான காட்சிகள் கொஞ்சம் குறைவுதான், இயக்குனர் அதைச் சரி செய்திருக்கலாம்.
‘மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு இரண்டு படங்களில் கேத்தரின் தெரேசா நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் படம் முழுவதும் வருகிறார். அவருடைய சிணுங்கல்கள் அனைத்திற்கும் அவருக்கான பொருத்தமான பின்னணிக் குரல் இன்னும் கூடுதல் அழகைத் தருகிறது.
படத்தில் சூரி இருக்கிறார், இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளில் வறட்சி அதிகம்தான். இயக்குனரே ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் இருந்தும் படத்தை கலகலப்பாக நகர்த்தாமல் எப்படியோ இழுத்துக் கொண்டு போகிறார். நல்ல வேளை ஆனந்த்ராஜ் வந்த பிறகு சூரியை ஓரம் கட்டிவிட்டு நகைச்சுவையை அவர் வசம் கொண்டு சென்று விடுகிறார். இடைவேளைக்குப் பின்னனர் ஆனந்த்ராஜ் – விஷ்ணு இடையிலான சடுகுடு விளையாட்டை திரைக்கதையில் விளையாடியிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.
விஷ்ணு அம்மா சரண்யா, கேத்தரின் அப்பா நட்ராஜ், அந்த தாசில்தார் மற்ற நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர்கள்.
ஷான் ரோல்டன் இசையமைப்பில் ‘தினமும் உன் நெனப்பு, டப்பு டிப்பு’ பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் ஷான் இன்னும் அதிக தூரம் போக வேண்டும்.
சிரிப்புத் தோரணமாக இருக்கும் என எதிர்பார்த்தால், தோரணத்தில் இடைவெளி அதிகமாக இருக்கிறது.