17.3 C
New York
Wednesday, October 9, 2024

Buy now

spot_img

Kanaa Audio Launch

நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். மேலும், பெண்கள் கிரிக்கெட் மையமாக வைத்து படம் எடுக்க முன்வந்த சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். 
 
இந்த படத்தின் மூலம் இயக்குனர், நாயகி என பல நல்ல விஷயங்களை சிவகார்த்திகேயன் வழங்கியிருக்கிறார். என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்ன கேட்டாலும் தெரியும் சார் என்று பொய்யாக சொல்லி விடுவேன். ஆனால் நாயகி ஐஸ்வர்யா தனக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு, அதன்பிறகு அதை கற்றுக் கொண்டு கடினமாக உழைத்திருக்கிறார். அதி தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் கம்புச்சண்டை, கத்திச்சண்டை மட்டுமே கற்றுக் கொண்டேன், அது மட்டுமே நான் சொன்ன உண்மை. என் பெயரில் தான் சத்தியம் இருந்தது  வாய்ப்பு கேட்கும் காலகட்டத்தில் நாவில் சத்தியம் இல்லை. மார்க்கெட்டில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும்  கதாநாயகன் இந்த மாதிரி ஒரு படம் தயாரித்து ஊக்குவிப்பது நல்ல விஷயம். கமல் சார் இதே மாதிரி என்னை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தை தயாரித்தார். விவசாயத்தையும், விளையாட்டையும் வைத்து கதை சொல்லியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நடிகர் சத்யராஜ்.
 
பெற்றோருக்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு முக்கியமான உறவு நண்பர்கள் தான். நல்ல விஷயங்களை சொல்ல துடிக்கும் என்னை மாதிரி பல இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து சிவா மேடையேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. டெல்டா மாவட்டத்தை சேர்ந்த எனக்கு கிரிக்கெட், விவசாயம் இரண்டுமே மிகவும் நெருக்கமானது. எனக்கும் கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது. அது நடக்கவில்லை. சினிமாவில் முயற்சி செய்தேன். ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கணும் என்று படத்தில் வரும் வசனம் எனக்கும் பொருந்தும். இந்த படத்துக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இதுவரை படம் வந்ததில்லை. இந்த படத்தில் அப்பா மகள் உறவு என்றவுடனே சத்யராஜ் சாரிடம் நடிக்க  கேட்டேன், அவரின் அனுபவம் படத்துக்கு கைகொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா கிரிக்கெட் ஆட தெரியாது, வேணும்னா கத்துக்கிறேன் என சொன்னவுடன் சின்ன பயம் வந்தது, நிச்சயமாக அது அவர் நடிப்பை பற்றிய  பயம் இல்லை. அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
 
இந்த படத்தில் முதலில் ஒரு கிரிக்கெட் வீராங்கணையை தான் நடிக்க வைக்கும் முயற்சியில் இருந்தார்கள். ஒரு நாள் சிவா எனக்கு கிரிக்கெட் தெரியுமா என யதேச்சையாக கேட்டார். அங்கிருந்து ஆரம்பித்தது இந்த பயணம், என் மீது நம்பிக்கை வைத்த அருண்ராஜா, சிவாவுக்கு நன்றி என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
 
அருண்ராஜா பாடல் எழுதி ஒவ்வொரு பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுத சொன்னேன், அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்த படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிட கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா, நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்கனு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார். விவசாயத்தை பற்றி பேசும் ஒரு கதாபாத்திரம் எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்தபின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்த படத்துக்கு என்ன தேவையோ அந்த செலவை செய்தோம். இந்த படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோ தான் செலவு செய்வேன். படம் தயாரிக்க போறேன்னு சொன்னவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார். ஆராதனாவை பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிற பணத்துக்கு சொத்து வாங்கி சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தை தயாரிக்கலாம்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தை தொடர்ந்து சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.
 
ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடை காமெடியனாக, பாடகராக, நடிகராக, பாடலாசிரியராக, முன்னணி நடிகராக, தற்போது ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நண்பனுக்காக படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் மனதை பார்க்கும்போது, அவரை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவருக்கு கூட அவரை பிடிக்கும் என்றார் இசையமைப்பாளர் டி இமான்.
 
அருண்ராஜா எழுதின பாடல்கள் எல்லாமே செம ஹிட். அவர் இந்த மாதிரி பெண்கள் கிரிக்கெட்டை மையாமாக வைத்து ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெருமையான விஷயம். அதை ஒரு நண்பன் தயாரிக்கிறது நெகிழ்ச்சியான விஷயம். எங்க கேங் எப்பவுமே எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க, இந்த பாஸ்டிவ் நண்பர்கள் கூட இருக்கிறது மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் அனிருத்.
 
பாடகி ஆராதனா குட்டிக்கு வாழ்த்துக்கள், குழந்தைகள் படம் பண்ணா ஆராதனாவை நடிக்க அனுப்பி வைக்கணும். ஒரு சில படங்கள் தான் ஆரம்பித்ததில் இருந்தே நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். என்னுடைய கடைசி படம் அப்படி தான் அமைந்தது. இந்த கனாவும் ஆரம்பத்தில் இருந்தே பாஸிடிவ்வாக  அமைந்தது. விளையாட்டு, விவசாயம் என நல்ல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புக்கு நான் ரசிகன். சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் என்று தான் என்னை வெளியில் நினைவு கூர்கிறார்கள். நாம் வளரும்போது நம்மோடு சேர்ந்து ஒரு சிலர் வளர்வது நமக்கு எப்போதுமே மகிழ்ச்சி. டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் சிவாவும் இருக்கிறார். அவர் படம் எப்போது வரும் என திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.
 
விழாவில் கனா இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, இயக்குனர்கள் மித்ரன், விக்னேஷ் சிவன், பாக்யராஜ் கண்ணன், ரவிக்குமார், ராஜேஷ், பொன்ராம், துரை செந்தில்குமார், விஜய், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன், பாடகர் சித் ஸ்ரீராம், நடிகர் இளவரசு, டான்சர் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE