12.4 C
New York
Friday, April 26, 2024

Buy now

விசாரணை – விமர்சனம்

ஆட்டோ டிரைவர் மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலின் திரை வடிவம் தான் இந்த ‘விசாரணை’.

முதல் பாதியில் ‘லாக்கப்’ நாவலையும், இரண்டாம் பாதியில் சென்னையின் புறநகர்ப்பகுதியில் நடந்த ஏ.டி.எம்.கொள்ளை எண்டர்கவுண்டரையும் பரபரப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்

ரிலீசுக்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கிக் குவித்த குறிப்பாக மனித உரிமையைப் பற்றிப் பேசும் படம் என்கிற உயரிய விருதை வாங்கிய இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்கிற ரசிகரின் கேள்விக்கு பதிலாக வந்திருக்கிறது இந்தப்படம்.

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு வரும் தினேஷ், முருகதாஸ் உள்ளிட்ட நான்கு நண்பர்கள் அங்குள்ள பார்க் ஒன்றில் படுத்துறங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

வழக்கம் போல அதிகாலையிலேயே வேலை செய்யும் மளிகைக் கடையை திறக்க வரும் தினேஷையும், அவரோடு சேர்த்து அவரது நண்பர்களையும் அள்ளிக்கொண்டு போகிறது போலீஸ்!

அந்த இடத்தில் ”இவங்க என்ன தப்பு செஞ்சாங்க..?” என்று ரசிகர்களின் மனதில் எழும் கேள்வியைத்தான் அள்ளிக்கொண்டு போகும் போலீசிடமும் கேட்கிறார்கள் தினேஷூம் அவரது நண்பர்களும்!

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டு வழக்கு ஒன்றில் நால்வரையும் கோர்த்து விடும் போலீஸ் ”செஞ்ச தப்ப ஒத்துகிட்டா உங்களை விட்டுடுவோம்” என்கிறது.

”நாங்க திருடலீங்க…” என்று பதில் சொல்லும் இளைஞர்களுக்கு கிடைப்பது என்னவோ காக்கியின் வரம்பு மீறிய ரணம் தரும் மரண அடிகள் தான்.

ஒரு கட்டத்தில் மரண வலியை தாங்க முடியாத அந்த நான்கு இளைஞர்களும் செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள, நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கூட்டிச் செல்கிறது போலீஸ்.

நல்லவேளையாக அங்கு வரும் தமிழ்நாட்டு போலீசான சமுத்திரக்கனி தயவால் நடந்த உண்மையை நீதிபதியிடம் சொல்லி தப்பித்து, அவருடனே தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

”அப்பாடா… தப்பிச்சோம்…” என்று லேசாக நிம்மதி பெருமூச்சோடு நால்வரும் சென்னைக்கு வருகிறார்கள்.

எந்த மாநிலமாக இருந்தாலும் காக்கியின் மனசாட்சி ஒன்று தானோ? என்று கேட்க வைக்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

உயிர் காத்த உதவிக்கு பதில் நன்றி காட்டும் விதமாக சமுத்திரக்கனிக்கு உதவி செய்ய முடிவு செய்கிறார்கள் நால்வரும். முதல் பாதியில் ஆந்திர போலீசிடம் சிக்கி கந்தலானவர்கள், இரண்டாம் பாதியில் தமிழ்நாட்டு போலீசிடம் சிக்கி என்ன ஆகிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

காவல் நிலையம் என்பது என்றைக்குமே சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு காவலாக இருந்ததில்லை என்கிற உண்மையை பொட்டில் அடித்தாற்போல் சீன் பை சீனில் நிஜத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன். ஹாட்ஸ் ஆப் வெற்றிமாறன் சார்!

ஹீரோவாக வரும் ‘அட்டகத்தி’ தினேஷ் அவரது நண்பர் முருகதாஸ் இன்னும் இரண்டு புதியவர்கள் போலீசிடம் வாங்கும் ஒவ்வொரு அடியும் ரசிகர்களின் நெஞ்சுக்குள் இடி போல இறங்குகின்றன. அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கே நமக்கு தைரியம் வேண்டும் என்றால் அடிக்கும் போலீஸுக்கு அதிகாரம் கொடுக்கும் தைரியம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பப்பா…

”உங்களை நம்பித்தானே வந்தோம் சார், இப்படி கை விட்டுட்டீங்களே…” என்று உயிர் பயத்தில் சமுத்திரக்கனியிடம் அந்த இளைஞர்கள் கதறுகிற காட்சிகள் நஞ்சு மனசையும் உருக்கி எடுப்பவை. அந்த அதிகாலை வேளையில் குளிர் நடுங்க குளித்து விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு தலையை துவட்டிக்கொண்டே சைக்கிளை மிதிப்பதில் ஆரம்பிக்கிறது தினேஷின் அட்டகாசமான நடிப்பு. முடியும் வரை மனுஷன் மனதில் நிறைகிறார்.

நாயகியாக வரும் ‘கயல்’ ஆனந்தி வந்தது என்னவோ சில காட்சிகள் தான். ஆனால் கண்களாலேயே பேசி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகிறார்.

”நானே இங்கே தெலுங்குகாரன்னு சொல்லி பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என்று தன் இயலாமையை வெளிப்படுத்தும் மளிகைக்கடைக்காரர் அல்வா வாசு மாநிலம் விட்டு மாநிலம் வாழும் பல மனிதர்களின் அப்பட்டமான சாட்சி!

காவல் நிலையம் குற்றவாளிகளை சீர்திருத்துகிற இடம் என்கிற கூற்றெல்லாம் காக்கிகள் செய்யும் அத்து மீறல்களில் காணாமல் போய் விடுகிறது. அதிலும் அந்த ஆந்திரா போலீசாக வரும் அஜய் கோஷ் பனை மரத்தின் பச்சை மட்டைகளை வெட்டியெடுத்து வெற்று உடம்போடு நிற்கும் தினேஷின் முதுகில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கை வலிக்க வலிக்க விளாசுவதெல்லாம் மிருகத்தனத்தின் உச்சம்!

உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி தன்னை நம்பி வந்த இளைஞர்களை காப்பாற்ற கடைசிவரை போராடுவதும், அவரை விட அதிகாரமிக்கவர்களும், அரசியல்வாதிகளும் மடக்கும் போது செய்வதறியாது திகைப்பதும், படத்துக்கு படம் வித்தியாசமான அதே சமயத்தில் மனதில் ஒட்டிக் கொள்கிற கதாபாத்திரத்திரம் அவருடையது.

ஜி.வி. பிரகாஷின் இசையும், ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் இரவு நேர ரத்த வெறியாட்டத்தை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைக்கும் தனித்துவம்.

எவ்வளவு பெரிய ஆளுமையின் ஆசி இருந்தாலும் பிரச்சனை என்று வந்து விட்டால் எப்படியெல்லாம் அரசியலும், அதிகார வர்க்கமும் கூட்டு சேர்ந்து உயிர் போகிற அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்பதை அமைதியான ஆடிட்டர் கேரக்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார் கிஷோர்.

கதையில் எவ்வளவு தூரத்துக்கு உயிர் இருக்கிறதோ? அதே அளவுக்கு ஒரு சதவீதம் கூட குறையாமல் உயிர்ப்புள்ள வசனங்களை எழுதியிருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன்.

”தம்பி அதிகாரிங்க பேசிக்கிட்டு இருக்கும் போது வரலாமா..? ஆமா முன்னாடியே வந்துட்டீங்களா..?” என்று நமட்டுச் சிரிப்பிலேயே விஷத்தை தடவி இளைஞர்களுக்கு பீதியை கிளப்பும் கேரக்டரில் பட்டையை கிளப்பியிருக்கிறார் எஸ்.ஐ.ஆக வரும் டைரக்டர் இ.ராமதாஸ்.

குரலற்றவர்களின் உடலின் மீது ஏவப்படும் அதிகார வர்க்கத்தின் வரம்பு மீறிய இருட்டுப் பக்கங்களை துணிச்சலாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘ஹாட்ஸ் ஆப்’ சார்… எங்கே நல்ல சினிமா என்று கேட்கிற ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய படம்!

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE