‘டூ லெட்’ படம் பார்த்து மிரண்ட ஈரானிய இயக்குநர்..!
26 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘டூ லெட்’..!
தான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன்.
ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப்புகழ்ந்துள்ளார்.
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப்படம் இத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது எப்படி என பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்..
“கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன்.. நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இதே வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப்படத்தை இயக்கினேன்.
இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார்.
ஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம்.. ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு.. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார்.
சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்..
இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது, அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக்கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.
வீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே? அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச் சொல்லலாம்.
கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக்கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாக திறந்துவிட்டது.
ஒவ்வொரு விழாக்களிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்துகொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர்.
இதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்..
இத் திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27 ந்தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் விபரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
’டூ லெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை.. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தை திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை..
வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம்.. சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள்.. நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்” எனக் கூறினார் செழியன்.