17.2 C
New York
Friday, September 13, 2024

Buy now

spot_img

Kizhakku Apricavil Raju Movie news

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். 
 
படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில் புரட்சி தலைவருடன் ஜோடியாக நடித்த புரட்சி தலைவி ஜெயலலிதா தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர்.
 
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. ரத்தம், உணர்வு எல்லாவற்றிலும் இணைந்து இருக்கக் கூடிய இருவர் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும். அவர்களை மீண்டும் பார்க்க மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நான் என் சிறு வயதில் எம்ஜிஆரை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரது படங்கள் எல்லாமே வெற்றிப் படங்கள் தான். அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜிட்டலில் மெறுகேற்றும் போது பார்க்க நேர்ந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பே  பிரமாண்டத்தோடு தொழில்நுட்பத்தையும் கலந்து சிறந்த படமாக கொடுத்திருந்தார் புரட்சி தலைவர். அதன் முடிவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை அடுத்த வெளியீடாக குறிப்பிட்டிருந்தார். ஒரு முறை ஐசரி கணேஷ் நேரில் சந்தித்த போது இந்த மாதிரி ஒரு படம் செய்யும் முடிவு வந்தது. கதையை தயார் செய்து அவரிடம் சொல்லியிருந்தேன், அவருக்கும் பிடித்து போய் 101வது பிறந்த நாளில் பூஜை போட்டு, 102வது பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்தோம். வால்ட் டிஸ்னி மாதிரி கம்பெனிகள் இந்த படத்தை எடுக்க 4 வருடங்கள் எடுத்து கொள்வார்கள். ஆனால் மிக குறுகிய காலத்தில் இந்த படத்தை நல்ல தரத்தோடு முடிக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. 
 
எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா இந்த படத்திலும் இருக்கும், இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவருக்கு இணையாக புரட்சி தலைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக எம்ஜிஆர் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் வைரமுத்து. எம்ஜிஆருக்கு பாடல் எழுதியதன் மூலம் அவரது கனவு நிறைவேறியதாக கூறினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இருந்து ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறோம். சர்வதேச தரத்தில் வெளியாகும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும் என்றார் இயக்குனர் அருள் மூர்த்தி.
 
சினிமா தயாரிப்பு, கல்லூரி, கல்வி பணிகளையும் தாண்டி இந்த படத்துக்காகவும் நேரம் ஒதுக்கி வேலை செய்து வருகிறார் ஐசரி கணேஷ் சார். நடிகர் சங்கத்துக்கு 15 வருடங்களாக உதவி செய்து வருகிறார். இந்த குழுவின் நலம் விரும்பியாக இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக அமையும். அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா, ஜாக்கி சான் ஆகியோரது படங்களையும் இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கும் காலம் வரும். நான் 17 படங்கள் ஜெயலலிதா அம்மாவோடு நடித்திருக்கிறேன் என்றார் நடிகை குட்டி பத்மினி. 
 
புரட்சி தலைவரின் 101வது பிறந்த நாளில் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என நிறைய யோசித்தோம். புரட்சி தலைவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஒரே நாயகியான புரட்சி தலைவி அம்மா அவர்கள் நம்மிடையே இன்று இல்லை. இந்த நேரத்தில் அவர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்பினோம். அவர்கள் இணைந்து நடிக்கும் 29வது படம் இது. நம்பியார், நாகேஷ், ஐசரி கணேஷ், தேங்காய் சீனிவாசன் ஆகியோரை மீண்டும் இந்த படத்தின் மூலம் திரையில் பார்க்கும் நோக்கத்தில் இந்த படம் உருவாக இருக்கிறது. 
 
எனக்கு 7 வயதாக இருந்த போது  வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். அதன் இரண்டாம் பாகத்தின் கதையும் எனக்கு தெரியும். குழந்தைகள், இளைஞர்கள் உட்பட எல்லோராலும் இன்றும் ரசிக்க கூடிய வகையில் படம் இருக்கும். எஸ்பி முத்துராமன், கே எஸ் ரவிகுமார், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரரிடமும் இந்த கதையை பற்றி விவாதித்திருக்கிறோம். முன் தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டது. லாஸ் ஏஞ்சலஸ், பெங்களூரு ஆகிய இடங்களில் படத்திற்கான வேலைகளை துவக்க இருக்கிறோம். எம் ஜி ஆர் கத்தி சண்டை போட்டதை நிறைய படங்களில் பார்த்து விட்டோம். அதனால் இந்த படத்தில் நவீன எந்திரங்களை கையாள்வதையும் வைத்திருக்கிறோம். கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, சூடான் ஆகிய இடங்களை சுற்றி கதை நடக்கும். லாப நோக்கத்துக்காக இந்த படத்தை எடுக்கவில்லை. லாபம் வந்தால் அதை நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்கு நன்கொடையாக அளிப்போம். படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இருக்கிறோம் என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.
 
இந்த சந்திப்பில் படத்தின் இணை தயாரிப்பாளர் அஸ்வின், நடிகர் வருண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE