சினிமாவோ அல்லது எந்த துறையோ காலத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்பவர்களே தொடர்ந்து முன்னேறி ஓடிக் கொண்டிருக்க முடியும்.
திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப் போன காட்சிகளை படத்துக்குப் படம் பார்த்து நொந்து போக எந்த ஒரு ரசிகரும் தயாராக இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் புதுமையான கதைகள், இதற்கு முன் பார்த்திருக்காத காட்சிகள்.
இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இந்த ‘இவன் தந்திரன்’ படத்தைக் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.
கல்லூரிக் கல்விக் கட்டணக் கொள்ளை, அரசியல்வாதிகளின் பணத்தாசை என இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும், அவற்றின் சாயல் இல்லாமல் வேறு ஒரு களத்தில், தளத்தில் வந்திருக்கும் படம்தான் ‘இவன் தந்திரன்’.
இஞ்சினியரிங் படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டு நண்பன் பாலாஜியுடன் சென்னை, ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் கௌதம் கார்த்திக். தான் செய்யும் வேலைகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் விடவே மாட்டார். ஒரு முறை மத்திய மந்திரி சூப்பர் சுப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமிராவை சரி செய்து கொடுத்ததற்கு 23000 ரூபாயைத் தராமல் மந்திரியின் மைத்துனர் விரட்டியடித்துக் கொண்டே இருக்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரிக்கு கடைசி நேரத்தில் பணம் கட்ட முடியாத மாணவன் ஒருவன் கௌதம் கண் முன்னே தற்கொலை செய்து கொள்கிறான். அதற்குக் காரணமாக இருந்த மத்திய மந்திரி சூப்பர் சுப்பராயனை ஏதாவது செய்து பழி வாங்கத் துடிக்கிறார் கௌதம். ‘பக்’ கேமரா மூலம் மந்திரியின் ஊழலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு, மந்திரியின் பதவி பறி போக காரணமாகிறார். அந்த வீடியோவை எடுத்தது யார் எனத் தெரியாமல் அதைச் செய்தவனை கொலை செய்யத் துடிக்கிறார் சுப்பராயன். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ‘க்ரிஸ்ப்பான’ இரண்டு மணி நேர ‘இவன் தந்திரன்’.
கௌதம் கார்த்திக், படத்திற்குப் படம் தன் நடிப்பில் மெருகை கூட்டிக் கொண்டே செல்கிறார். அதிலும் இந்தப் படத்தில் மிகவும் மெச்சூர்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குரலிலும், சில காட்சிகளிலும் அன்று பார்த்து ரசித்த அவருடைய அப்பா கார்த்திக்கை அப்படியே ஞாபகப்படுத்துகிறார். இப்போதுதான் சரியான ரூட்டைப் பிடித்திருக்கிறீர்கள் கௌதம், விடாதீர்கள், அப்படியே தாவிச் சென்று விடுங்கள். அதற்கு ‘இவன் தந்திரன்’ சரியான திருப்பத்தைத் தந்திருக்கிறது.
படத்தின் இரண்டாவது கதாநாயகன் என ஆர்.ஜே.பாலாஜியை தாரளமாகச் சொல்லலாம். எதைப் பற்றி அவர் கமெண்ட் அடிக்கவில்லை என்றுதான் கேட்க வேண்டும். த்ரிஷா, பீட்டா, அம்பானி, ஹர்பஜன் சிங், கிரிக்கெட் கமெண்ட்ரி என அடித்துத் தள்ளிக் கொண்டே போகிறார். தியேட்டர்களில் கைதட்டல் உறுதி.
கல்லூரி மாணவியாக ஷ்ரதா ஸ்ரீநாத். படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். அதிலும் ஒன்றுதான் டூயட் பாடல். காதல் காட்சிகளும் அதிகமில்லை. இருந்தாலும் இருவரும் தங்களுக்குள் காதலை பரிமாறிக் கொள்ளும் அந்த ஒரு மழைக் காட்சி கவிதை..கவிதை…
வில்லனாக சூப்பர் சுப்பராயன், வழக்கமான அரசியல் வில்லன். அவருடைய மைத்துனராக கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டிவிட்டுச் செல்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா.
படத்தில் இரண்டே பாடல்கள்தான். படத்திற்கு இசை தமன். அதிலும் அந்த முதல் பாடல், ‘கச்சேரி கச்சேரி, களை கட்டுதடி’..என்ற இமான் பாடலை ஞாபகப்படுத்துகிறது. பின்னணி இசையில் பார்த்து, பார்த்துதான் செய்திருக்கிறார்.
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மை மீறாமல் நகர்கிறது. ஆர்.கே. செல்வா படத்தை சரியாக ஷார்ப்பாக தொகுத்திருக்கிறார்.
ஒரு சில இடங்களில் மட்டும் கமர்ஷியல் சினிமாவுக்கே உரிய சின்னச் சின்னக் குறைகள். ஆனால், அவை படத்தின் வேகத்தில் மறைந்துவிடுகின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் டிக்கெட் விலை அதிகமாகியிருக்குமோ என்ற கவலையை மறந்து படத்தை ரசிக்கலாம்.