நாவல்களைத் திரைப்படமாக்குவது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அந்தக் காலத்திலாவது நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவது அவ்வப்போது நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி படமாக்கப்படுவது குறைந்துவிட்டது. அந்தக் குறையை மட்டும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் தீர்த்து வைத்துள்ளது.
சென்னையில் ஒரு நாள் 2 - கோயமுத்தூரில் ஒரு நாளில் நடக்கும் கொலைக் கதை
பிரபல மர்மக் கதை எழுத்தாளரான ராஜேஷ் குமாரின் நாவல் ஒன்றைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது என்ன நாவல் என்பதைக் கூட டைட்டிலில் காட்டவில்லை.
கோயமுத்தூர் மாநகரத்தில் ஒரு நள்ளிரவில் ‘ஏஞ்சலின் கொலை இன்றா, நாளையா’ என ஊர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு காவல் துறை அதிகாரியான சரத்குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனிடையே, சரத்குமார் வீட்டிற்கு ஏஞ்சல் என்ற பெயரில் ஒரு மர்மக் கடிதம் வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து ஒரு மனநலக் காப்பகத்தை விசாரணை வளைத்துக்குள் கொண்டு வருகிறார் சரத்குமார். ஆனால், அங்கும் திடீரென ஒரு கொலை நடந்து வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. கடைசியில் அந்த போஸ்டருக்கான காரணம் என்ன, தன் வீட்டிற்கு வந்த ஏஞ்சல் என்ற பெயரிலான மர்மக் கடிதத்தை எழுதியது யார், மனநலக் காப்பகத்தில் நடைபெற்ற கொலைக்கு என்ன காரணம் போன்ற விவரங்களை சரத்குமார் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காவல் துறை அதிகாரியாக சரத்குமார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு சர்வ சாதாரணம். ஆனால், சரத்குமாரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகப் பயன்படுத்தாமல் முற்றிலும் ஒரு விசாரணை அதிகாரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியிலும், அதன் பின் சில காட்சிகளில் அவர் தனியாக நின்று புகை பிடிக்கும் காட்சியிலும் மட்டுமே ஏதோ பில்ட்-அப் கொடுப்பது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவருடைய முழு திறமையையும் இயக்குனர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சரத்குமாருக்கு டிரைவராக முனீஷ்காந்த், கோயமுத்தூர் கமிஷனராக நெப்போலியன், மனநலக் காப்பக பாதுகாவலராக வரும் சுகாசினி ஆகியோர் மட்டுமே படத்தில் தெரிந்த முகங்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள்தான்.
படத்தில் இரவு நேரக் காட்சிகள்தான் அதிகம். இருந்தாலும் பல இடங்களில் காட்சிகள் கொஞ்சம் இருட்டாகவே இருக்கிறது. இரவு நேரம் என்றாலும் தனித்துவமான லைட்டிங்கை அமைத்திருக்கலாம். படத்திற்கு டி.ஐ. செய்யவில்லையோ என்று யோசிக்கும் அளவிற்கு பல காட்சிகள் டல்லடிக்கின்றன.
இப்படிப்பட்ட த்ரில்லர் படங்களில் கேமரா கோணங்களும், பரபப்பான எடிட்டிங்கும் அமைய வேண்டும். காட்சிகள் அடுத்து என்ன என்று கேட்கும் அளவிற்கு பரபரப்பாக நகர வேண்டும், அது படத்தில் மிஸ்ஸிங்.
ஒரு முழு நீளத் திரைப்படம்தான் என்றாலும் ஒரு குறும்படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.