நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அனுஷ்கா, கணவனாகப்போகும் தன் காதலனை சுட்டுக்கொன்ற வழக்கில் சிறையில் இருக்கிறார். நேர்மையான மத்திய அமைச்சராக ஜெயராம் மீது அவதூறு பரப்ப, சில அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்காக சிபிஐ அதிகாரியான ஆஷா சரத் நியமிக்கிறார்கள்.
ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர்.
இதற்காக ஜெயிலில் இருக்கும் அனுஷ்காவை, பேய் பங்களா என்று அழைக்கப்படும் பாகமதி கோட்டைக்கு அழைத்து வருகின்றனர். அந்த கோட்டைக்குள் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஒரு சில நாட்களில் தான் பாகமதி என்றும், பாகமதியின் உடைகளை எடுத்து போட்டுக் கொண்டும் அங்குள்ளவர்களை மிரட்டுகிறார்.
அந்தக் கோட்டைக்குள் உண்மையிலேயே நடந்தது என்ன? பாகமதி யார்? பாகமதிக்கும் அனுஷ்காவுக்கும் என்ன சம்மந்தம்? ஜெயராம் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நேர்மையான கலெக்டர், பேய் பிடித்த பெண் என வித்தியாசம் காண்பித்து நடித்து அசத்தியிருக்கிறார் அனுஷ்கா. அதுவும் தன் கையில் தானே ஆணியடித்துக் கொள்கிற காட்சி சிறப்பு. மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜெயராமின் உண்மையான முகம் தெரிய வரும்போது, இது ஏற்கெனவே தெரிந்த கதை தானே என்ற சலிப்பு ஏற்படுகிறது.
சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷா சரத், ‘பாபநாசம்’ போலவே மிரட்டலான அதிகாரியாக நடித்திருக்கிறார். அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருக்கும் முரளி சர்மாவும் நன்றாக நடித்திருக்கிறார். எஸ்.தமனின் இசையும், ஆர்.மதியின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கின்றன.
பாகமதி என்பது யார்? பாகமதி என்ற கதாபாத்திரத்தை வைத்து ஆக்ஷன், வரலாறு, திகில் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.அசோக். படத்தில் திகில் காட்சிகள் திருப்திபடுத்தும்படி இருக்கின்றன. எனினும் படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி ரசிகர்களுக்கு முழு விருந்தளிக்கும் விதமாக உருவாக்கியிருக்கலாம்.
‘பாகுபலி’க்குப் பிறகு ரிலீஸாகும் படம் என்பதால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறியிருக்கிறது ‘பாகமதி’. இதுபோன்ற கதைகள் ஏற்கெனவே வந்துவிட்டதால், கதையின் போக்கை எளிதாக யூகித்துவிட முடிகிறது.
தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம். ஆர்.மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அட்டகாசமாக வந்திருக்கிறது.