12.4 C
New York
Friday, April 26, 2024

Buy now

kathal kasakudhaiya

திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம். ஒரு படத்தில் இடம் பெறும் கதை, அதை நகர்த்திக் கொண்டுச் செல்லும் திரைக்கதை, அதற்குப் பொருத்தமான வசனங்கள் இவற்றோடு, படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் காட்சியின் ஊடாக அவர்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுப்பதே ஒரு திரைப்படம்.
காதல் கசக்குதய்யா – கசப்பு அதிகம், காதல் குறைவு
நாடகத்திலிருந்துதான் திரைப்படமும் மருவி வந்தது. நாடகத்தில் வசனங்கள் இல்லாத காட்சியமைப்புகளை அதிகம் வைத்து பார்ப்பவர்களை புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது. கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டுதானிருக்க வேண்டும். ஆனால், திரைப்படத்தில் அப்படி இல்லை, வசனம் இல்லாமலே காட்சியமைப்புகளின் மூலமே பார்வையாளனுக்கு புரியும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். அதை சிறப்பாகக் கையாள்பவர்கள்தான் சிறந்த இயக்குனர்கள்.

ஆனால், இன்று அறிமுகமாகி வரும் பல இயக்குனர்களுக்கு திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற புரிதல் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்கள் ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் இசையமைப்பாளர் வாசித்துத் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். இப்படி ஒரு படத்தைப் பார்க்கும் அனுபவம் நேர்ந்தால் என்ன செய்வது…
அப்படி ஒரு அனுபவம்தான் ‘காதல் கசக்குதய்யா’ படத்தைப் பார்த்த போது கிடைத்தது. குறும் படம் இயக்கிய இயக்குனரா துவராக் ராஜா என்பது தெரியவில்லை. ஒரு பத்து நிமிட குறும்படத்தில் சொல்ல வேண்டிய கதையை, நீ……ட்டி முழக்கி இரண்டு மணி நேரம் கொடுத்திருக்கிறார்.

நாயகன் துருவ் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். அவருடைய அம்மா கோமாவில் படுத்த படுக்கையாக இருக்கிறார். துருவ்வைப் பார்த்ததும் பிளஸ் 2 படிக்கும் மாணவி வெண்பாவுக்குக் காதல். வயதில் சிறிய பெண்ணான வெண்பா தன்னைக் காதலிப்பது துருவ்வுக்குப் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரும் காதலில் விழுகிறார். வெண்பா வீட்டிற்கு இந்தக் காதல் தெரிய வர இருவரும் பிரிகிறார்கள். காதலே வேண்டாமென நிம்மதியாக இருக்க முடிவெடுக்கிறார் துருவ். அவர் மீண்டும் காதலில் விழுந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் நாயகன் துருவ் நடிக்கும் காட்சிகளில் 95 சதவீதக் காட்சிகளில் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார். அதற்காக இயக்குனருக்கு தலையில் ஸ்ட்ராங்காக ஒரு கொட்டு வைக்க வேண்டும். காதலி சொன்னாலும் கேட்கவில்லை, அம்மா சொன்னாலும் கேட்கவில்லை, சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார். கொஞ்சம் கிறுக்குத்தனமானவராக துருவ் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அவரும் நடிக்க வேண்டும் ஆர்வத்தில் நடித்துத் தள்ளுகிறார். இயல்பான நடிப்பு என்றால் என்ன என்பதை விஜய் சேதுபதியின் நான்கு படத்தைப் பார்த்து கற்றுக் கொள்வது அவருக்கு நல்லது.
படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் நாயகி வெண்பா. பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறார். தன்னை விட வயது அதிகமானவரைக் காதலித்தாலும் அது பற்றிய பயமோ, தயக்கமோ இல்லாமல் அணுகுவது அவ்வளவு யதார்த்தமாக உள்ளது. காதல் பித்து அதிகம் பிடித்த பெண்கள் யாரைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட பெண் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனாலும், பள்ளி படிக்கும் மாணவிகளின் காதலை இனியாவது இயக்குனர்கள் தவிர்ப்பது நல்லது.
நாயகனுக்கு இரண்டு நண்பர்கள். இருவரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், அப்புறம் பேசுகிறார்கள், பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தரண்குமார் யார் எனப் பார்க்க வேண்டும். நீண்ட நாள் கழித்து இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததா எனத் தெரியவில்லை. வாசிக்கிறார், வாசிக்கிறார், வாசித்துத் தள்ளுகிறார். நாயகன், நாயகி, நண்பர்கள் ஆகியோர் ஏற்கெனவே படம் முழுவதும் பேசிக் கொண்டேயிருக்க இசையமைப்பாளரும் போட்டிக்கு அவர்கள் பேசுவதைக் கேட்கவிடாமல் இரைச்சலான இசையைக் கொட்டுகிறார்.
குறும்படம் எடுத்துவிட்டோ, அனுபவம் இல்லாமலே படம் இயக்க வரும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைக்கவில்லையா, பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரின் சிறந்த படங்களைத் தேடிப் பிடித்து பாருங்கள். ரசிகர்களை அவர்களது படங்கள் மூலம் எப்படி கவர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அதன்பின் வந்து நல்ல படத்தைக் கொடுங்கள். நல்ல படங்கள்தான் உங்கள் பெயரைச் சொல்லும் படங்களாக இருக்கும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE