தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய்க் கதைகள் வந்து கொண்டுதானிருக்கிறது. அதே பழி வாங்கும் பேய்க் கதை என்பதுதான் நெருடலான விஷயம்.
பேய்ப் படம் என்றாலும் புதிய பரிமாணத்தில் சொல்லப்படும் படங்களே ரசிகர்களைக் கவர்கின்றன. மற்ற வழக்கமான கதை கொண்ட படங்கள் ரசிகர்களைக் கவராமல் போய் விடுகின்றன.
இந்த மாதிரியான படங்களுக்கு நட்சத்திரங்கள் முக்கியமில்லை, அழுத்தமான கதையும், பரபரப்பான திரைக்கதையும் இருந்தாலே போதும். இதில் ‘எந்த நேரத்திலும்’ படம் வழக்கமான கதை கொண்ட பேய்ப் படமாகவே வந்திருக்கிறது.
மலைப் பிரதேச எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்வர்கள் கணவன் மனைவியான யஷ்மித், சான்ட்ரா எமி. எமியின் தம்பி ராமகிருஷ்ணனுக்கு லீமா பாபுவுடன் காதல். ஒரு நாள் தன் காதலியைப் பார்க்க வேண்டுமென அக்கா எமியை அழைக்கிறார் ராமகிருஷ்ணன். லீமாவை தூரத்தில் இருந்து பார்த்தே அதிர்ச்சியாகிறார் எமி. அடுத்த நாள் லீமாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வருகிறார் ராமகிருஷ்ணன். எமி, யஷ்மித், எமியின் அப்பா மூவரும் லீமாவைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார்கள். அந்த அதிர்ச்சியிலேயே வெளியே போகும் போது விபத்தில் யஷ்மித்தும், எமியின் அப்பாவும் மரணமடைகிறார்கள். அதன் பின் எமி, ராமகிருஷ்ணன் கோத்தகிரியில் உள்ள வேறு வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு லீமாவைப் போன்றே உருவமுள்ள ஒரு பேய் எமியை பயமுறுத்துகிறது. லீமா போன்ற உருவமுள்ள அந்தப் பேய் யார், அது ஏன் எமியை பயமுறுத்துகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சான்ட்ரா எமி, ராமகிருஷ்ணன் அக்கா தம்பியாக நடித்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் காதலியாக லீமா பாபு, எமியின் கணவராக யஷ்மித். படத்தில் நடிப்பதற்கான வேலை எமிக்கும் லீமாவுக்கும் மட்டுமே இருக்கிறது. அதிலும் இடைவேளைக்குப் பின்தான் இருவருக்கும் அந்த வேலை. ஒருவர் பயமுறுத்தி அலற வைக்கிறார், மற்றவர் பயப்பட்டே அலற வைக்கிறார்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு, மற்ற தொழில்நுட்பம் அனைத்துமே சராசரியாகவே அமைந்துள்ளது.