வன்சன் மூவீஸ் தயாரிப்பில் மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பில் ஜெய், பிரணீதா, கருணாகரன், காளி வெங்கட், நவீன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
படத்திற்கு ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ என்று பெயர் வைத்ததிலிருந்தே இந்தப் படம் ஒரு நகைச்சுவைப் படம் என புரிந்து கொள்ளலாம்.
ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய்யும் பிரணீதாவும் காதலர்கள். ஆனால், திடீரென ஜெய்யுடனான காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் பிரணீதா. காதலில் தோல்வியுற்ற ஜெய் யாருக்கும் சொல்லாமல் ஒரு ஹோட்டலில் தங்கிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அவரைக் காணாமல் நண்பர்கள் தேட ஆரம்பிக்கிறார்கள். கடைசியில் அவர்கள் ஜெய்யைக் காப்பாற்றுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஜெய்யிடமிருந்து அப்படி பெரிய அளவில் எந்த நடிப்பையும் எதிர்பார்க்க முடியாது. இந்தப் படத்தில் 90 சதவீத காட்சிகளில் ஒன்று அவர் அழுகிறார் அல்லது அடுத்தவர்களை அழ வைத்துப் பார்க்கிறார்.
பிரணீதாதான் படத்தின் நாயகி. ஆனால், கொஞ்சமாகத்தான் வருகிறார். அவருக்கும் கொஞ்சமாகத்தான் ‘மேக்கப்’ போட்டிருக்கிறார்கள். எதற்கு நடிக்கிறோம் என்று தெரியாமலே நடிப்பது போல இருக்கிறது அவருடைய நடிப்பு.
ஜெய்யைத் தேடும் நண்பர்களாக காளி வெங்கட், கருணாகரன், நவீன். மூவரி நம்மை அதிகம் சிரிக்க வைப்பவர் என்று பார்த்தால் காளி வெங்கட் தான். கருணாகரனையும், நவீனையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பில் முந்தியிருக்கிறார்.
படத்திற்கு டி.ஐ. கூடப் பண்ணவில்லை போலிருக்கிறது. திரையில் மொத்த படமுமே மங்கலாகத் தெரிகிறது.
இடைவேளை வரை கொஞ்சம் தள்ளாடிச் செல்லும் திரைக்கதை, பின்னர் நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
ஒரு வரியில் பார்த்தால் நல்ல கதையாகத் தெரிகிறது, ஆனால், திரைக்கதை அமைத்து காட்சிகளை உருவாக்கியதில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் மிகவும் சுவாரசியமான படத்தைப் பார்த்த திருப்தி ரசிர்களுக்குக் கிடைத்திருக்கும்.