முதல் பாகத்தில் தப்பித்த தீவிரவாதியான ராகுல் போஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை கமல்ஹாசன் அன்ட் கோ கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த இரண்டாவது பாகத்தின் கதை. முதல் பாகத்தில் அமெரிக்காவில் நடந்த கதை அங்கிருந்து நகர்ந்து இங்கிலாந்து செல்கிறது. அங்கு கடலுக்கு அடியில் 1500 டன் வெடி பொருட்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ள, சீசியம் வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கிறார். கதை, அங்கிருந்து பின்னர் இந்தியா வருகிறது. அங்கு கமல்ஹாசன் அன்ட் கோ-வைக் கடத்துகிறார் தீவிரவாதி ராகுல் போஸ். அவரால் இந்தியா முழுவதும் 64 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டை கமல்ஹாசன் செயலிழக்க வைக்கிறாரா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
முதல் பாகத்தின் கதை என்ன என்பதை ஒரு சில வரிகளில் எழுத்தாக மட்டும் சொல்லிவிட்டு, இரண்டாம் பாகக் கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குனர் கமல்ஹாசன். இரண்டு வருட இடைவெளியில் வெளியான ‘பாகுபலி 2’ படத்திலேயே முதல் பாகத்தின் கதையை அனிமேஷன் ஆகச் சொல்லி நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டு இரண்டாம் பாகத்திற்குள் சென்றார்கள்.
ஆனால், 5 வருட இடைவெளியில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட்ட கமல்ஹாசன், படத்தின் ஆரம்பத்தில் சேர்த்த மக்கள் நீதி மய்யம் பற்றிய காட்சிகளுக்குப் பதிலாக ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் கதைச் சுருக்கத்தை காட்சிகளாகவே ஒரு குறும்படமாகவே காட்டியிருக்கலாமே…‘விஸ்வரூபம் 2’ படத்தை மக்கள் ரசிப்பதை விட ‘மக்கள் நீதி மய்யம்’ பற்றிய டாகுமெண்டரியை ரசிப்பார்கள் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது. சினிமாவில் எதற்கு இந்த அரசியல் ?.
இந்த இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா இடையிலான காதல் (?), கமல்ஹாசனின் அம்மா பாசம், கமல்ஹாசன் ஆப்கானிஸ்தானுக்குள் எப்படிப் போனார் என்பதைக் கொஞ்சம் டீடெய்லாகக் காட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் முதல் பாகத்திற்காக எடுக்கப்பட்ட அல்லது எடுக்க திட்டமிட்ட காட்சிகளாக இருந்திருக்கும். படத்தின் நீளம் காரணமாக அதில் சேர்க்க முடியாமல் போய், இந்த இரண்டாம் பாகத்தில் வைத்து, ‘இங்கிலாந்தில் குண்டு, இந்தியாவில் குண்டு’ என கதையை நீட்டி ஒரு இரண்டாம் பாகத்தை ‘பார்சல்’ செய்திருக்கிறார்.
கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டிருக்கலாம். சிறு சிறு உணர்வுகளைக் கூட அவர் காட்டும் விதம் வழக்கம் போலவே விஸ்வரூபமாக வெளிப்படுகிறது. ஆனால், மேக்கப்பில் அதிக மெனக்கெடும் கமல்ஹாசன், படம் முழுவதும், முகத்தில் இரண்டு பிளாஸ்டர்கள் போடப்பட்டிருந்தாலும் மழுங்க ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் எப்படி இருக்க முடியும் என ஒரு டவுட் வருகிறது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா இருவருக்கு இடையிலும் இருப்பது, காதலா, நட்பா, அதிகாரி உதவியாளர் உறவா என புரியாமல் தவிக்கிறார் கமல்ஹாசனின் மனைவி பூஜாகுமார். கமல்ஹாசன் – ஆன்ட்ரியா இருவர் இடையிலும் ஒரு பாடலிலேயே அந்தக் காதலை அழகாகப் புரிய வைக்கிறார்கள். சரி, இருவரும் எதற்காகப் பிரிந்தார்கள் என்பதை சொல்லவேயில்லையே, ஒருவேளை முதல் பாகத்தில் சொல்லியிருப்பாரோ, இல்லை என்றால் அதையே ஒரு மூன்றாவது பாகமாக எடுத்துவிடலாம். பூஜாவை வெறுப்பேற்றுவதற்காக கமல்ஹாசனுடன் நெருக்கமாகப் பழகும் ஆன்ட்ரியாவின் குறும்பும் அழகாகத்தான் இருக்கிறது.
தீவிரவாதத் தலைவன் ராகுல் போஸ், இரண்டாம் பாகத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அதே மிரட்டல். கமல்ஹாசன் மேல் அதிகாரியாக சேகர் கபூர், கமல் மீதான நம்பிக்கையை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். தேசத் துரோகியாக அனந்த் மகாதேவன், சில காட்சிகளில் வந்தாலும் அவரது நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை பக்கபலமாக அமைந்த அளவிற்கு பாடல்கள் அமையவில்லை. ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், சண்டை இயக்குனர்கள், கலை இயக்குனர் என அனைவரும் அவர்களது உழைப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள். வசனங்களில் ஆங்காங்கே அரசியலையும், அரசாங்கத்தையும் சாடுகிறார் வசனகர்த்தா கமல்ஹாசன்.
முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை, பரபரப்பை இந்த இரண்டாம் பாகம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.