2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை
அண்ணன் தங்கச்சி கதையெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் ஆகிருச்சே… என்று தமிழ்சினிமா ‘கெக்கேபிக்கே’வாகிக் கிடக்கும் இந்த காலத்தில், காட்சிக்கு காட்சி கண்ணீரையும் சென்ட்டிமென்டையும் நிரப்பி ஒரு படம். பி.வாசுவுக்கு பிரதரா இருப்பாரோ என்கிற டவுட்டையும் அவ்வப்போது கிளப்புகிற இயக்குனர் இரா.சரவணன், கட்ட கடைசியில் நம்ம கண்லேயும் ரெண்டு சொட்டு ஜலம் வச்சு அனுப்பி விடுவதால், இந்த ‘உடன்பிறப்பே’… உள் மனசு வரைக்கும் போய் ஒரு ஃபெதர் டச் கொடுக்கிறது. ஆனாலும் குருவித்தலையில் குண்டானை கவிழ்த்த மாதிரி இவ்ளோ சென்ட்டிமென்ட் ஆவாது பாஸ்!
ஒரே தெருவில் இந்த முனையில் தங்கச்சி ஜோதிகாவும், அந்த முனையில் அண்ணன் சசிகுமாரும் குடியிருக்கிறார்கள். ஆனால் பல வருஷங்களாக நோ பேச்சு வார்த்தை. ஏனாம்? சசிகுமாரின் கோவக்கார பேஸ்கட்டும், அடிதடியும், ‘நமக்கு ஆவாதுப்பா’ என்று மச்சான் சமுத்திரக்கனி ஒதுங்கிக் கொள்கிறார். வேறு வழியில்லாமல் அவரது மனைவியான ஜோதிகாவும் அவ்வண்ணமே செயல்படுகிறார். பொங்கி வரும் பாசத்தை பிக்சட் டெபாசிட்டில் போட்டுவிட்டு அவ்வப்போது கிடைக்கும் சொற்ப வட்டியை கொண்டே உருகுகிறார்கள் தங்கையும் அண்ணனும். பெருத்த போராட்டத்திற்குப் பின் இவ்விரு குடும்பங்களும் இணைந்ததா என்பதே மிச்ச சொச்ச படம்.
சசிகுமாருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஜோதிகாவுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகளில் தனி கவனம் தெரிகிறது. அதிலும் அந்த அறிமுகக் காட்சி யம்மாடியோவ். அதற்கப்புறம் வேறொரு இக்கட்டான நேரத்தில், தன் ஜடையை கொண்டே அந்த வில்லனை முடித்துக் கட்டும் ஜோதிகா, பெண்கள் ஏரியாவின் பெஸ்ட்டோ பெஸ்ட்! காட்சிக்கு காட்சி, ‘அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ’ என்று உருக்குகிறார் ஜோ. நமக்குதான் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்பும் முந்தானை ஓரத்தில் மூக்கு சிந்தும் சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
லேசான நரையும், நெஞ்சு நிமிர்த்திய நடையுமாக சசிகுமாரின் கேரக்டர் அடித்து துவம்சம் செய்கிறது. பக்கம் பக்கமாய் வசனம் பேசி, ரசிகனை படுத்தி வந்த சசி இப்படத்தில் அளந்து பேசுவதாலேயே அளவில்லாமல் ரசிக்க வைக்கிறார்.
பத்து நிமிஷத்துக்கு முன்னால் வந்திருந்தால், ஒரு பாலிஸி போட்டு கவுத்துருக்கலாம் என்று தவிக்கிற எல்.ஐ.சி ஏஜென்ட் முக பாவனையிலேயே டிராவல் ஆகிறார் சமுத்திரக்கனி. நல்லவேளை… முரட்டு மச்சானாகவோ, முரட்டு புருஷனோவாக இல்லாத வரைக்கும் இன்பம்.
ரொம்ப நாள் கழித்து பார்ப்பதாலேயே சூரி பிடித்துப் போகிறார். அவ்வப்போது அடிக்கும் டைமிங் ஜோக் நிச்சயமான ரிலாக்ஸ்சேஷன்.