கல்வி நிறுவனங்களில் நடக்கும் அநியாயம், அக்கிரமம் ஆகியவற்றை மையமாக வைத்து சமீப காலமாக தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும், அந்த நிறுவனங்களின் கொள்ளையை ஆணி வேர் வரை சென்று சொல்லாமல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போலத்தான் பலரும் படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் ‘திரி’.
பள்ளி ஆசிரியரான ஜெயப்பிரகாஷின் மகன் அஷ்வின், இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கிறார். அஷ்வினை எம்.இ. படிக்க வைத்து கல்லூரியில் பேராசிரியராகச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அப்பா ஜெயப்பிரகாஷின் ஆசை. ஆனால், அஷ்வின் படிக்கும் கல்லூரி நிர்வாகம் அவரின் பி.இ. நன்னடத்தை சான்றிதழில், ‘Bad’ என போட்டுத் தருகிறது. அதை மாற்றித் தர கல்லூரியின் தாளாளரும், அரசியல்வாதியுமான ஏ.எல்.அழகப்பனிடம் சென்று முறையிடுகிறார் அஷ்வின்.
ஒரு முறை, அழகப்பனின் மகனை கல்லூரிக்கு முன் அஷ்வின் அடித்ததால்தான் அப்படி போட்டுக் கொடுத்தார்கள் என்பது அஷ்வினுக்குத் தெரிய வருகிறது. அழகப்பன் சான்றிதழை மாற்றித் தர முடியாது என்கிறார். இதனால், ஆத்திரமடையும் அஷ்வின், அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
முதல் முறையாக ஒரு அழுத்தமான கதாநாயகனாக அஷ்வின் நடித்திருக்கிறார். நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் நாயகனாகவும் மாறுகிறார்.
படத்தின் நாயகியாக ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதி. படத்தின் நாயகி என்றுதான் பெயர், பெரிய வேலை எதுவுமில்லை.
நாயகனுக்கு அடுத்து அப்பாவா நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். வில்லன் ஏ.எல்.அழகப்பன், அவர் மகன் அர்ஜய் ஆகியோருக்குக் கூட முக்கியத்துவம் இல்லை.
இப்படிப்பட்ட ஆக்ஷன் படத்திற்கு பின்னணி இசைதான் பரபரப்பைக் கூட்ட வேண்டும். அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் அஜேஷ்.
சரியான கதையைத் தேர்வு செய்தவர்கள், விறுவிறுப்பான திரைக்கதையை யோசித்திருக்கலாம்.