18.1 C
New York
Saturday, May 25, 2024

Buy now

“Theera Kadhaal” Media meet

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது
இந்தப்படத்தில் ‘உசுராங்கூட்டில்..’ என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் ‘உசுராங்கூட்டில்..’ என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்தால் தன் எக்ஸ் உடன் நாகரீகமாகப் பழகுவார்கள். மனைவியுடன் அன்பாக இருப்பார்கள். ஜெய்யுடன் முன்பே எஸ் ஏ சி சார் படத்தில் பாட்டெழுதி உள்ளேன். ஐஸ்வர்யா மேடமுடன் வேலை பார்க்க வேண்டுமென ஆசை, அவர் இப்போது பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் வாழ்த்துக்கள். இந்தப்படத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் விக்னேஷ் பேசியதாவது..,
‘தீராக் காதல்’ எனக்கு மிக முக்கியமான படம். ஏனெனில் இது இசையமைப்பாளர் சித்துவின் படம். நாங்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள், ஜெய் சாரின் ‘வாமனன்’ படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பாடல் மட்டுமில்லை படத்தில் வரும் அனைத்து பாடலும் நன்றாக வந்துள்ளது, படக்குழுவிற்கு வாழ்த்துகள் நன்றி.

இசையமைப்பாளர் சித்து குமார் பேசியதாவது…
‘தீராக் காதல்’- திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம் தான் இயக்குநர் ரோகின் அறிமுகம். என்னை இந்தப்படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. லைக்கா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி. எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப்படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப்படம் விழிப்புணர்வு தரும். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் அப்துல் லீ பேசியதாவது…
ரோகின் சாருக்கு இது மூணாவது படம். அவருடைய மூணாவது படத்துலயும் நான் இருக்கிறேன் என்பதே சந்தோஷம். ஐஸ்வர்யா மேடம், ஷிவதா மேடம் இருவரும் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஜெய் சாரை ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே ரொம்ப பிடிக்கும். நான் வியந்து பார்த்த பிரபலங்களுடன் நடிப்பது சந்தோஷம். இந்தப்படத்தில் நீங்கள் ரிலேட் பண்ணிக்கொள்ள நிறைய இருக்கும். இந்தப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் பேசியதாவது…
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் ரோகின் வெங்கடேசனுக்கு நன்றி. ஜெய் சார் போன்ற பெரிய ஹீரோவுடன் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வை, வந்தவுடன் இயல்பாகப் பழகி, போக வைத்துவிட்டார். ஷிவதா மேடமுடன் ‘அதே கண்கள்’ படத்திலும் வேலை பார்த்துள்ளேன். ஐஸ்வர்யா மேடமும் இயல்பாக இருந்தார். நடிகர்கள் சிறப்பாக இருக்கும் போது எங்களது வேலை எளிதாகிவிடும். இந்தப்படத்தில் எனக்குப் பிடித்த கேரக்டர் அம்ஜத் கேரக்டர் தான். சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் நிறையச் சுதந்திரம் தந்தார். லைக்கா புரடக்‌ஷனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் அம்ஜத் பேசியதாவது..,
மேடை ஏறிப் பல நாட்கள் ஆகிவிட்டது, இந்த வாய்ப்பினை அளித்த ரோகினுக்கு நன்றி. படத்தின் முழுக்கதை பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய பகுதி மட்டும்தான் எனக்குத் தெரியும், ஒட்டு மொத்த கதையும் அதற்குப் பின்னர் தான் தெரியும், என்னுடைய கதாபாத்திரம், தனித்துவமாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.

எழுத்தாளர் ஜி. ஆர். சுரேந்திர நாத் பேசியதாவது..
இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், ரோகினும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்த மாதிரி படம் தமிழில் பண்ணவேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால், அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. முன்பு எக்ஸ் லவ்வர் சந்திப்பது மிக அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியை விட, எக்ஸ் லவ்வருடன் தான் டச்சில் இருக்கிறார்கள். இந்தப்படம் நடக்கும் போது, என் தாய் தந்தையரை உடல் நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப்படத்தின் கதை தான். இந்தக்கதை உணர்வுகளை.. நடிகர்கள் நன்றாக நடித்தால் தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசியதாவது..
முதன் முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள் எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிகள் விதித்தார், ஒன்று டான்ஸ் இருக்க கூடாது மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது , இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி.

நடிகை ஷிவதா பேசியதாவது ,
இதற்கு முன்னாடி ரோகினுடன் அதே கண்கள் படத்தில் வேலை பார்த்துள்ளேன். அப்போதே அவரிடம் அடுத்து என்ன எனக் கேட்டேன். காதல் கதை தான் என்றார். என்னை நடிக்க வைப்பீர்களா? என்று கேட்டேன். இந்தக்கதையை அனுப்பினார். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். ஐஸ்வர்யா அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக்கொண்டே இருப்பார். நிறைய உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார். சித்து மிக நல்ல பாடல்களை தந்துள்ளார். சுரேந்தர் சாரிடம் இது யாருடைய கதை எனக்கேட்டேன். சிரித்தார். இந்தப்படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…,
எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது, ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார். இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி

நடிகர் ஜெய் பேசியதாவது…,
இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது, ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார். பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது. சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும், இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி அவருடைய பணி தனித்துவமாக இருக்கும், படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர், ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன், தயாரிப்பாளர் லைக்கா தமிழ் குமரனுக்கு நன்றி, ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி, படம் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசியதாவது..
இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைக்காவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக்கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன் தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப்படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார். சுதன் இந்தப்படம் செய்யவில்லை என்ற போது தான் லைக்காவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப்படம் ஓகே ஆனது. ஹீரோ எனும் போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும், அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள். ஜெய் வசனம் இல்லாத போது தான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன். ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார், ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப்பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். வ்ரித்தி குழந்தைகளை நடிக்க வைப்பது தான் கஷ்டம், ஆனால் வ்ரித்தி எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். மிக அட்டகாசமாக நடித்துள்ளார். அம்ஜத் என் எல்லாப்படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச்சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக்கதை மீது நம்பிக்கை கொண்டவர். எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக்கொள்வார். டெக்னிகல் டீமில் எல்லோருமே மிகக்கடுமையாக உழைத்துள்ளனர். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப்படம் ஆரம்பிக்கும் போது, வீட்டில் காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றார். அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப்படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப்படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார். என் குடும்பத்திற்கு நன்றி. தீராக் காதல் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் மே 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE