17.8 C
New York
Wednesday, May 14, 2025

Buy now

spot_img

Thanni is good.. Tasmac is not good- Radha Ravi

தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; ஏப்ரல் 21 வெளியாகும் 'மாவீரன் பிள்ளை' படம் பற்றி ராதாரவி பேச்சு

தமிழகத்தில் குழந்தைப்பேறு குறைந்ததற்கு காரணம் மது தான் ; மாவீரன் பிள்ளை படம்  பார்த்துவிட்டு எச்.ராஜா குற்றச்சாட்டு

மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சித்த மருத்துவம் வேண்டும் ; மாவீரன் பிள்ளை பட நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள்    

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்பது குறித்தும் விவசாயிகள் படும் துயரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  இந்தப்படம் உருவாகியுள்ளது..

சமீபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராதாரவி பேசும்போது,
“மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.  இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது.  தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பேசும்போது,
“கலைஞர் ஆட்சியில் தான் தமிழ்நாடு சாராயம் ஓடும் மாநிலமாக மாறியது. இன்றைக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து செயல்படுகிறார்கள். வருமானம் அதிகமாக காட்டாத 40 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றனர். இதைவிட கேவலமான ஒரு நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்காது. அதனால் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தை, தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தடுத்தாலும் பெண்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும். தமிழகம் எந்த அளவுக்கு மதுவால் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று சொன்னால், ஏற்கனவே சகோதரி கனிமொழி தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள் காரணம் இளைஞர்கள் அனைவரும் குடித்து செத்துப் போய் விடுகிறார்கள் அதனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என அவர்களே ஒரு சமயத்தில் குரல் கொடுத்தார்கள்.

அப்படி தங்கள் வசதிக்காக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தான் இன்று அதிகமாக மது விற்பனை காட்டாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றார்கள். இந்த அராஜகமான சூழ்நிலைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினால் தான் தமிழ்நாடு திருந்தும். பல வருடங்களுக்கு முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற விளம்பரம் எங்கு பார்த்தாலும் காட்சியளிக்கும். ஆனால் இன்று குழந்தைப்பேறு வேண்டி மருத்துவமனையை நாடும் அளவுக்கு மதுவால் ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இதில் மாற்றம் வர வேண்டும் என்றால் இது போன்ற படங்கள் பல எண்ணிக்கைகளில் வரவேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,
“தமிழகத்தில் மதுவானது மக்களை மிருகங்களாக மாற்றி குடும்பங்களை சீரழித்து வருகின்றது. கலைஞர் மதுக்கடையை துவங்கினார்.. பிறகு மூடினார்.. மீண்டும் எம்ஜிஆர் தொடங்கினார்.. பின்னர் தனியாருக்கு மாற்றினார்.. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் அதை அரசாங்கமே நடத்தும் ஒரு அவல நிலையை உருவாக்கி விட்டார். போன வருடத்தை விட இந்த வருடம் அதிக வசூல் காட்ட வேண்டும் என தீபாவளி பொங்கல் பண்டிகைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கும் கொடுமையும் நடக்கிறது.

குடியால் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து அதில் அவர்களுக்கு உயிர் காக்கின்ற, உடம்பில் மீண்டும் புத்துணர்ச்சியை கொண்டுவரச் செய்யும் சித்தா மருந்துகளை கொடுக்க செய்ய வேண்டும். குடிக்கு எதிராக போராடி உயிரை விட்ட ஐயா சசிபெருமாளின் நினைவை போற்றும் விதமாக இந்த படத்தை இயக்குனர் ராஜா எடுத்துள்ளார். இது போன்ற படங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு வேண்டும்” என்று பேசினார்.

இந்து தமிழர் நல கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் பேசும்போது,
“இன்று நாம் பார்த்த இந்த மாவீரன் பிள்ளை படத்தின் கருவை தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் அக்னி நெருப்பின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன். மிகச்சிறப்பாக இந்த படத்தை எடுத்த இயக்குனர் ராஜாவுக்கும் இந்த படத்தில் சிறப்பாக நடித்தவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதுவுக்கு எதிராக போராடி மது இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என உயிரை விட்ட சசிபெருமாள் போன்றவர்களை இந்த அரசாங்கத்திற்கு தெரியாது.. மதுவினை விற்று அதன் மூலம் வருமானம் பார்க்கும் ருசிபெருமாள்களை மட்டும் தான் இவர்களுக்கு தெரியும்.

அப்படி மதுரவிற்காக உயிரை விட்ட சசிபெருமாளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த வைகோ திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்.. மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் எழுதிய கோவன் போன்ற சமூக போராளிகள் எங்கே போனார்கள் ? பள்ளியில் படிக்கும் மாணவன் பாஸ்மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் தேடிச்செல்லும் இழிநிலை இன்று தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. மது, மது விற்பனை இவற்றிற்கு எதிராக மக்கள் ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்கிற கருத்தை இந்த படத்தில் வலியுறுத்தியதற்காகவும் விவசாயத்தின் அவசியம், விவசாயிகள் படக்கூடிய துயரங்கள், குடிநீரின் அவசியம் ஆகியவற்றையும் எடுத்துச் சொன்னதற்காகவும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்து மக்கள் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பாரத மாதா செந்தில் பேசும்போது,
சமீப காலங்களில் சமூகத்தை சீரழிக்கும் விதமாக தான் அதிக அளவில் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசியல் ரீதியாக சீரழிந்து கொண்டிருக்கிற இந்த சமூகத்திற்கு மதுவை கொண்டு வந்த அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என நான் குற்றம் சாட்டுகிறேன். ஒவ்வொரு விவேகானந்தர் ஜெயந்தியின் போதும் “மது இல்லா தமிழகம்.. மகிழ்ச்சியன தமிழகம்” என்கிற பெயரில் மதுவுக்கு எதிரான போராட்டங்களை எங்களது கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். நாங்கள் வெளியில் நடத்தும் போராட்டங்களை இந்தப் படத்தில் காட்டுவதற்காக எடுத்திருக்கும் இவர்களது பெரும் முயற்சிக்கு நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம். மக்களும் துணையாக இருக்க வேண்டும்.

மது மட்டுமல்லாமல் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பல பிரச்சனைகளையும் இந்த திரைப்படம் காட்டியுள்ளது. மேலும் விவசாயிகளின் நடைமுறை பிரச்சனைகள் அனைத்தையும் இந்த படம் காட்டியுள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி இந்த படக்குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, தமிழருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE