16.4 C
New York
Saturday, April 26, 2025

Buy now

spot_img

Take good pictures on a small budget: P. C. Shriram talks

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு!

சினிமாவுக்கு எழுத்து தான் அஸ்திவாரம்.எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பேச்சு!

சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேச்சு!

இளையராஜா போல பி.சி. ஸ்ரீராமையும் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்தபாலன் பேச்சு!

'ட்ரீம் கேர்ள்'படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய 'மீரா' படத்தின் கதாசிரியரும் 'அழியாத கோலங்கள் 2' படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ட்ரீம் கேர்ள்' . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை.
படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .
சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது,

"முதலில் வாய்ப்பு கொடுத்த எம். ஆர். பாரதி அவர்களுக்கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர் . பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சென்னையில் எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்" என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,

" இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்'' என்றார்.

படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,

" இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது. அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால் மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்" என்றார்.

எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா பேசும் போது,

" தமிழ்நாட்டில் கனவுகளைக் காட்சியாக்கிக் கொடுத்த பி. சி . ஸ்ரீராம் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.நான் அண்ணன் எம். ஆர் .பாரதியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவர் எப்போதோ இயக்குநராக இருக்க வேண்டியது. சற்று தாமதம் ஆகிவிட்டது.எனக்கு ஒரு நல்ல சகோதரராக நண்பராக இருக்கிறார். நாங்கள் 30 ஆண்டு கால நட்புடன் இருக்கிறோம்.
நான் சென்னை வந்த போது சென்னையில் ஒரு நம்பிக்கை நீரூற்றாக அவர் தான் இருந்தார். அவரே தனக்கான இடத்தை சிரமப்பட்டு தேடி அமைத்துக் கொண்டுள்ளார்.இருந்தாலும் பலருக்கும் நம்பிக்கை தருபவராக இருந்தார். பல விளம்பரப் படங்கள் எடுத்துள்ளார். எப்போதும் போராடிக் கொண்டிருப்பவர் தான் . அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையைத் தருபவர் .
ஒரு நல்ல வரியைக் கூறினால் ஒரு அழகான காட்சியைக் கூறினால் கூட குழந்தையைப் போல ரசிப்பார்.

உலக அளவில் திரைப்படங்கள் பார்ப்பவர். உலக சினிமாக்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துபவர். அவர் எப்போதும் ஒரு ரசிகராகவே தன்னை உணர்வர் .அந்த ரசிக மனம் தான் அவரை உயிர்ப்போடு வைத்துள்ளது.அவர் ஒரு ட்ரீம் பாய் .அவரது கனவு தான் இந்தப் படம்.இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, 'ஏ.ஐ' என்கிறார்கள் .அழகியலை எந்த 'ஏஐ' யாலும் உருவாக்க முடியாது .அந்த அழகியல் உள்ளவரை உலகம் அழியாது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கும். இது கனவைப் பற்றிப் பேசுகிற படம். இதைத் தனது கனவுப் படம் என்று அவர் உருவாக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது,

" எனது நண்பர்களில் பாரதிக்கு சிறப்பான இடம் உண்டு.ஒரு நாள் ஒரு கதை இருக்கிறது பேசலாம் என்று எங்களை அழைத்தார்.
நாங்கள் லிங்குசாமி,பாலாஜி சக்திவேல், பிருந்தா சாரதி ஆகியோர் அவர் அழைத்த இடத்திற்குச் சென்றோம். சேலையூரில் ஒரு ரிசார்ட்டில் எங்களை அழைத்து கதை பற்றிப் பேசாமல் மனம் குளிர சாப்பாடு போட்டார். கதை பற்றிப் பேசுவது இவ்வளவு சுகமானதா என்று நினைத்தோம்.

அவர் தனது உழைப்பால் தனது பதிப்பகத் துறையில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் .நான் கிராமத்திலிருந்து சென்னை வந்த போது எனக்கு, சாதாரண வணிகப் படங்களை மட்டுமே பார்த்து வந்த எனக்கு, ஆன்டன் செகாவையும் அகிரா குரோசாவையும் அறிமுகப்படுத்தியவர் அவர்.இவர்களெல்லாம் சினிமாவில் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுத்தியவர்.அவர் நல்ல ரசிகர். நல்ல கவிதை சொன்னால் 500 ரூபாய் பரிசு கொடுப்பார் .எங்களது வாசிப்பை விரிவு படுத்தியவர்.அவரது ஒரு வரிக் கதை இந்த அற்புதமான படமாக வந்திருக்கிறது .படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,

" இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.
படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்" என்றார்.

இயக்குநரும் கதை வசன கர்த்தாவுமான பிருந்தா சாரதி பேசும் போது ,

"பத்திரிகையில் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இயக்குநர் எம் ஆர் பாரதி. 1992 இல் இருந்து அவர் எனக்குப் பழக்கம்.

'மீரா' படத்திற்குப் பிறகு 'அழியாத கோலங்கள் 2 ' எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் டிவி உலகத்தில் ஒரு வெற்றியாளராக இருந்தார். தொலைக்காட்சிகளுக்கு வெற்றியாளர்களின் கதைகளை எடுத்து நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார். பல விளம்பரப் படங்களும் எடுத்துள்ளார் அப்போது நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன் .அதற்காகப் பல ஊர்களுக்கு அவருடன் சென்று இருக்கிறேன்.
அதன் மூலம் சொற்ப வருமானம்தான் வந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார். இவரது மனைவி ஒரு பொறியியல் பேராசிரியர். பொறியியல் கல்லூரிக்காக அவர் எழுதிய புத்தகத்தை கல்லூரிகளின் பாடத்தில் துணைப்பாடத்தில் சேர்த்து விட வேண்டும் என்று முதலில் இவர் தேடி அலைந்தார். ஆனால் அது பெரிய வெற்றி பெற்று இன்று பெரிய வெற்றிகரமான பதிப்பாளராக இருக்கிறார்.

அவரை முதலில் சந்தித்தபோது பிடித்த படத்தைக் கேட்ட போது நான் 'மூன்றாம் பிறை' என்றேன் அதிலிருந்து அவர் இணக்கம் ஆகிவிட்டார்.

எனக்குப் பிடித்த படங்கள் 'மௌன ராகம்','முதல் மரியாதை', 'உதிரிப்பூக்கள்' என்றிருந்தது. அவர்தான் எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தினார்.'சாருலதா' என்ற படத்தைப் பற்றி அவர்தான் முதலில் பேசினார்.அகிரா குரோசோவா போன்ற மேதைகளை அறிமுகப்படுத்தினார்.
சிறந்த ரசனை உள்ளவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அழியாத கோலங்கள் 2' என்று அற்புதமான படத்தை இயக்கினார் .திரைப்பட உருவாக்கத்தில் இப்படியும் செய்யலாமா என்று யோசிக்க வைத்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கனவு இருக்கும் . அந்தக் கனவு தான் இந்தப் படம்.

இங்கே வந்திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்களை நான் பிலிமாலயா பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று அவரிடம் எப்படி பேசுவது என்ன கேள்வி கேட்பது என்று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம் உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவரது சித்தி பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத் என்றார். அவரைச் சந்திக்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப்போது அவர் 'உன் கண்களால் உலகைப் பார் 'என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப்படி உலகம் பார்க்கும் கண்களால் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் நமக்கு வேறு விதமாக அழகாகத் தெரிந்தன .
இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

 

இயக்குநர் கதிர் பேசும்போது,

"நான் கல்லூரியில் படித்த போதே எம்.ஆர். பாரதி எனக்கு பழக்கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். 'வேலியில்லா மாமரம்' என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம்.
அவர் நல்ல புத்தக வாசிப்பு கொண்டவர்.
எனது புத்தக அறிவுக்குக் காரணம் அவர் தான். அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நாவல்கள் நிறைய படிப்போம். அவற்றை மீண்டும் மீண்டும் அங்கே போய் படிப்போம்.
எழுத்து என்பது சினிமாவுக்கு மிகவும் அத்தியாவசியம். சினிமாவுக்கே எழுத்துதான் அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இன்று சீர்கெட்டுப் போயிருக்கிறது.யாரும் படிப்பதில்லை .ஆனால் புத்தகம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பாரதி இங்கே இயக்குநராக இருக்கிறார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
படம் கவிதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்"
என்றார்.

.திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,

"சென்னை வந்த காலத்தில் இருந்து பாரதியை எனக்குத் தெரியும் .
அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

"'மீரா' படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் - விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும்.

இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் .

இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது 'மௌன ராகம் 'படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன்.
'திருடா திருடா 'படத்தின் 'தீ தீதித்திக்கும் தீ ' பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் .
கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது
அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.

வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் .

அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது 'குருதிப்புனல்' ,'அக்னி' நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .

'அலைபாயுதே', 'ஓகே கண்மணி', 'சீனி கம் ' வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள் பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்"
என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,

"இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா?
அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.

நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார்.
நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்" என்றார்.

இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,

"நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.'நெஞ்சமெல்லாம் நீயே' என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் .

'மீரா' படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் 'அழியாத கோலங்கள் 2 'படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.

இந்த 'ட்ரீம் கேர்ள்' படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .

சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது.

சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.

நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.

முதலில் நான் 'மீரா' படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.

எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் 'அழியாத கோலங்கள் 2 'எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்" என்றார்.

நடிகை இந்திரா வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுமயா தொகுத்து வழங்கினார்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE