14 C
New York
Friday, May 9, 2025

Buy now

spot_img

‘Smoke’ web series produced and directed by actress Sona in association with Shortflix

ஷார்ட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ்

‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் மூலம் இயக்குனராக மாறிய நடிகை சோனா

“என் வாழ்க்கையை வேறு யாரும் படமாக்க வாய்ப்பு தர விரும்பவில்லை “ ; நடிகை சோனா அதிரடி

“யாரையும் கெட்டவர் என உடனடியாக கணிக்காதீர்கள்” ; வாழ்க்கை அனுபவம் பகிர்ந்த சோனா

“’ஸ்மோக்’ வெப்சீரிஸில் 99 சதவீதம் உண்மையை சொல்லப்போகிறேன்” ; நடிகை சோனாவின் துணிச்சலான முடிவு

நடிகை சோனாவின் சுயசரிதையாக உருவாகும் ‘ஸ்மோக்’ ; படமாக எடுக்காமல் வெப்சீரிஸாக இயக்குவது ஏன் ?

அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா. பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார்.

ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் இந்த வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார். இந்த வெப்சீரிஸ் குறித்த அறிமுக நிகழ்வில் இதுவரையிலான தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இந்த வெப்சீரிஸுக்கான கதை உருவான விதம் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் சோனா.

“2000-ல் என்னுடைய பயணம் தமிழில் தொடங்கியது. அதன்பிறகு 2003-ல் தெலுங்கிலும் நுழைந்தேன். அங்கேயும் என்னுடைய பயணம் நல்லபடியாக சென்றது. பிறகு கொஞ்சநாள் கழித்து சில காரணங்களால் நடிப்பை விட்டு ஒதுங்கி மலேசியா சென்றேன். பின்னர் மீண்டும் சிவப்பதிகாரம் படம் மூலம் திரும்பி வந்தேன். அதன்பிறகு மலையாளம். கன்னடம் என மற்ற மொழிகளிலும் அழைப்பு வந்தது. சில படங்களில் நடித்த பிறகு மீண்டும் ஒரு இடைவெளி.. அதன் பிறகு மீண்டும் சினிமா தான் என முடிவு செய்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

சிவப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்தேன். என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள்.. அது என்னுடைய தவறுதான். ஆனால் நானும் ஒரு சராசரி பெண் தான்.. என் வீட்டு வேலைகளை நான் தான் செய்கிறேன்.. என்னை கவர்ச்சி நடிகை என சொல்வது ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் போனது. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை தேடினேன். ஒரு கட்டத்தில் என் மீதான கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் கூட நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

நான் ஏதோ ஒன்றை ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன்.. சினிமாவைப் பொறுத்தவரை நான் நினைக்காத அளவுக்கு நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். எல்லாமே எனக்கு கேட்காமலேயே கிடைத்தது. வாழ்க்கையில் எனக்கு வந்த சில பிரச்சனைகள் தானாகவே சரியாகின. சில பிரச்சனைகளை நான் சிரமப்பட்டு போராடி சரி செய்ய வேண்டி இருந்தது. சில தப்புகளை நாம் பண்ணி இருப்போம். சில தப்புகளை நாம் பண்ணியிருக்க மாட்டோம். ஆனால் இந்த இரண்டினாலும் ஏற்படும் பிரச்சனைகளை நாம் தான் அனுபவிப்போம்.. இத்தனை வருட அனுபவத்தில் தான் உணர்ந்து கொண்ட விஷயங்களில் முக்கியமானது யாரையும் இவர் இப்படித்தான் என எளிதாக கணித்து விடாதீர்கள். யாரையும் கெட்டவன் என உடனடியாக கூறி விடாதீர்கள் அன்றைக்கு அவர்களது சூழல் வேறு மாதிரி இருந்திருக்கலாம். அது அவர்கள் பேச்சிலோ செயலிலோ வெளிப்பட்டிருக்கலாம். நானே கூட சிலரை அப்படி தப்பாக நினைத்திருக்கிறேன். 10 வருடத்திற்கு முன்பு சில விஷயங்களுக்காக நான் ஆவேசமாக நடந்து கொண்டதை இப்போது நினைத்து பார்த்தால் அந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் மென்மையாக கையாண்டிருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. திரை உலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் தான் என்றாலும் இவ்வளவு ஆண்கள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த திரை உலகில் என்னால் போராடி நின்று இருக்க முடியாது. பலரும் எனக்கு பின்புலத்தில் ஆதரவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியலை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அதில் ஈடுபடும் அளவிற்கு ஆர்வமில்லை. சில நேரங்களில் ஏன் தான் சினிமாவுக்கு வந்தோமோ என்று நினைப்பேன். ஆனால் சினிமா என்பது ஒரு மாயை.. நம்மை மீண்டும் உள்ளே இழுத்து வந்துவிடும்..

2010ல் குமுதம் இதழுக்காக தேவி மணி சார் ஒரு கவர் ஸ்டோரி செய்யதாத். அது ஆரம்பித்து அது கிட்டத்தட்ட 20 வாரத்திற்கு மேல் சென்று வரவேற்பு பெற்றது. அப்போதுதான் பத்திரிகையாளர் தேவி மணி இதையே நீங்கள் திரைப்படமாக உருவாக்கினால் என்ன என கேட்டார். அந்த கவர் ஸ்டோரியை புத்தகமாக உருவாக்கியபோது தான், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேனா என ஆச்சரியப்பட்டேன். அதன்பின்னர் இந்த கதையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் டைரியில் எழுத துவங்கினேன். 2017-ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.

எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்த கதையை சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனை பார்த்து என்னை கிண்டல் செய்கிறார்களோ எனது தான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.

இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இது ஒரு இயக்குநராக கிடைத்த வாய்ப்பு என்பது சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையை சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன். இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக நான் அடுத்த கட்டத்திற்கு வளர தொடர்ந்து ஆதரவு தந்த நீங்கள் ஒரு இயக்குனராக வளரவும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.

இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை கதையாக உருவாக்கி இருக்கிறேன் இந்த முதல் சீசனில் எத்தனை எபிசோடுகள் எடுக்கப் போகிறேன் என திட்டமிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் கதைகளை யாராவது ஒருவர் படமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என் கதையை அப்படி வேறு யாரும் சொல்லக்கூடாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் 99 சதவீதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் அதற்காக என்னை கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை எல்லாமே மாற்றி இருக்கிறேன். இன்னும் ஒரு ஹைலைட் என்னவென்றால் இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன்.

இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும்.. இதை திரைப்படமாக எடுக்கலாமே என பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்கு பிடிக்காது. ஆனால் ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்த தொடர் இருக்கும்.

இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது ‘தி பிகினிங் ஆப் எண்ட்’ (The Begining Of End) என ஒரு டேக்லைனை சேர்க்க இருக்கிறேன். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். நாளை பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை நானே தயாரிக்கிறேன். மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படத்தை இயக்கிக்கொண்டே நடிப்பது கடினம் போலத்தான் தெரியும். கூடுதலாக எனக்கு தயாரிப்பு சுமையும் சேர்ந்து இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நினைப்பது போல இது எனக்கு கடினமாக இல்லை.

இந்த வெப்சீரிஸில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கபில் ராய் மற்றும் கலை இயக்குனராக பாலா ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த உள்ளேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்” என்று கூறினார் சோனா.

  • Johnson Pro

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE