காஞ்சிபுரத்தில் 50 வருடங்களுக்கு முன் ராஜபட்டு சேலைகள் பிரபலம். மன்னர் குடும்பத்துக்காகவும் கோவில் களுக்காகவும் ராஜபட்டு நெய்து தரும் பாரம்பரியம் மிக்கவர் வரத ராஜன்.காலப்போக்கில் அதில் வருமானம் குறையும் நிலையில் தங்களுக்கு பட்டு சேலை நெய்து தரும்படி நண்பர் சந்திரசேகர் கேட்டுக் கொண்டு ஒரு ஒப்பந்தம் போடுகி றார்.நெசவு தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதில் சந்திரசேகர் இழுத்தடிப்பு செய்யும் நிலையில் இனி சேலை நெய்து தருவதில்லை என்று வரதராஜன் கூறுகிறார். என்னிடம் ஒப்பந்தம் செய்திருப்பதால் என்னைத் தவிர வேறுயாருக்கும் சேலை நெய்யக்கூடாது அப்படி செய்தால் ஜெயில் தள்ளிவிடுவேன் என்று சந்திரசேகர் மிரட்டுகிறார். கோபம் அடைந்த வரதராஜன் தறி நெய்யும் வீட்டை இழுத்து மூடுகிறார். இந்நிலையில் வரதராஜனின் பேரன் சிவகுமார் வளர்ந்து ஆளாகி குடும்பத்தை காப்பாற்ற பாடுபடு கிறான். சந்திரசேகர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான்.சந்திரசேகர் மகளுடன் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கிறது. வரதராஜன் குடும் பத்துக்கும், சந்திரசேகர் குடும் பத்துக்கும் மீண்டும் மோதல் எழு கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு என்ன என்பதை சென்டிமென்ட்டாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.
படம் முழுவதும் இதுவரை பார்க்காத முகங்களாக பிராங்க் ராகுல், விஜய் கார்த்திக், ரஞ்சனா நாச்சியார் இவர்களுடன் இளங்கோ குமணன் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த நால்வருக்குமே மிகவும் நீண்ட வாய்ப்புகள், ராகுல் ஒரு பக்கம் கத்தி கத்தி ஸ்கோர் செய்திருக்கிறார் என்றால் இளங்கோ குமணன் ஒரு தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பில் ஜொலிக்கிறார்.
நாயகி மாதுரி, நல்வரவு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து வசீகரிக்கிறார். அவர், தனது மாமா மகளின் கணவன் ராகுலை அண்ணா என்று அழைக்கும் போது, நம்ம ஹீரோவுக்கு அத்தையல்லவா முறை வருகிறது, ஆனால் காதலித்து தொலைக்கிறார்களே என்கிற கன்பியூசன் வருகிறது.
ரஞ்சனா நாச்சியார், கொஞ்சம் அதிகமாக நடித்திருந்தாலும் சீரியல் மாதிரி ஆகியிருக்கும், அளவோடு நடித்துவிடுகிறார்.
தொழில் நுட்பரீதியில் அர்ஜுனனின் ஒளிப்பதிவு மட்டும் பாராட்டும் படி இருக்கிறது. ஒரு பொம்மை கையை வைத்து சண்டைப்பயிற்சி அமைத்த சண்டை இயக்குநருக்கும் பாராட்டுகள். இன்னொரு சண்டைக்காட்சியில் ஆதி எறியும் செங்கல் அந்த நீச்சல் குளத்தில் மிதப்பதை தவிர்த்திருக்கலாம்.
அப்புறம் முக்கியமான விஷயம், நெசவு தொழில் ஒட்டுமொத்தமாக இன்று மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. குறிப்பாக ராஜபட்டுகள் இன்றும் நெய்யப்படுகின்றன், இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக தரமான பட்டுகள் காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்டு உலகம் முழுவதும் பயணிக்கின்றன. ஆகவே, நமது கலாச்சார பாரம்பரிய அடையாளம் கொண்ட ஒரு பெருமை மிகு விஷயத்தில் கதை எழுதும் போது அதீத கவனமாக இருந்திருக்க வேண்டும். அதே நெசவில், தறி ஓட்டுபவரை விட வியாபாரிகளும் புரோக்கர்களும் அதிகமாக சம்பாதிக்கும் விஷயத்தை மட்டும் தொட்டு காதல் கலாட்டா என்று இன்னும் கொஞ்சம் சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கலாம்.
சில அறிவுரைகளை ஆதி ஏற்றுக்கொண்டிருக்கத்தான் வேண்டும். கதை திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, எடிட்டிங், இயக்கம் அத்துடன் ஹீரோவாகவும் நடிப்பது என்கிற சபதத்தை படத்தில் வரும் தாத்தா மாதிரியே வாபஸ் வாங்கிவிட்டு சில துறைகளை மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டும். குறிப்பாக திரைக்கதை மற்றும் வசனங்கள் துறையை. ஏனென்றால் ஆதியால் அவரது அடையாளமான இசையில் கூட முழுமையான கவனம் செலுத்தியிருக்க இயலவில்லை என்பது சில பாடல்களில் தெரிகிறது. அதை புரிந்துகொள்ள இசை ஞானம் மிக்கவராக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை ஆதி ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.
