படத்தில் முதல் அரை மணி நேரமே வந்தாலும் அதற்குள்ளாக ஐயா ஆதிமூலம் கதாபாத்திரத்தில் வாழ்ந்து முடிக்கிறார் விஜய் சேதுபதி. தன்னுடைய 25வது படத்தை ஒரு நாடகக் கலைஞனின் படமாக அவர் திட்டமிட்டு கொடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.
70 வயதைக் கடந்த ஒரு நாடகக் கலைஞனை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவர் நடித்த கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்துடன் இருக்கின்றன. அது இந்த ‘சீதக்காதி’ ஐயா ஆதிமூலம் கதாபாத்திரத்தையும் ஒரு அடையாளமாக இருக்க வைக்கும்.
மக்கள் கூட்டமே வரவில்லை என்றாலும், மக்கள் முன் நடிப்பதுதான் சிறப்பு என நாடகத்தை விடாமல் நடத்திக் கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. ஒரு நாடக மேடையிலேயே அவருடைய உயிரும் பிரிகிறது. சினிமாவில் நடிக்க விருப்பமில்லாதவர், இறந்த பின் சினிமாவில் நடிக்கும் நிலை வருகிறது. அவருடைய ஆத்மா அவருடைய குழு நாடக நடிகர்களுக்குள் புகுந்து நடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மௌலி, அந்த ஆத்மாவை சினிமாவிலும் நடிக்க வைக்கிறார். அந்த ஆத்மா நடித்த பல படங்கள் வெற்றி வாகை சூடுகின்றன. அப்படி சுனில் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகிறார். ஆனால், ஒப்பந்தத்தை மீறி அவர்கள் சொல்லாத காட்சிகளை எடுப்பதால் விஜய் சேதுபதியின் ஆத்மா வருவது நின்று விடுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
விஜய் சேதுபதியின் மரணத்திற்குப் பிறகு படத்தில் இரண்டு கதாநாயகர்கள் ஒருவர் ராஜ்குமார் மற்றொருவர் சுனில். இருவருமே நகைச்சுவை நடிப்பில் அசத்துகிறார்கள். ராஜ்குமார் இதற்கு முன்பு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். நடிக்கவே தெரியாதவர் உடம்பில் விஜய் சேதுபதியின் ஆத்மா புகுந்த பின் அவர் நடித்துத் தள்ளுவதும், ஆத்மா விலகிய பின் அவர் நடிக்க முடியாமல் தடுமாறுவதும் என ராஜ்குமார் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.
அறிமுக நடிகர் சுனில். நடிகராக ஆசைப்பட்டு அவரே தயாரித்து நடிக்கிறார். ஆத்மா அவருக்குள் வராமல் நின்று விட அதன் பிறகு அவர் நடிக்கத் தடுமாறுவதும், பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதும் என அசத்துகிறார். தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு நகைச்சுவை நடிகர் கிடைத்திருக்கிறார்.
அவர்களுக்குப் பிறகு படம் முழுவதும் வரும் ஒரே நடிகர் மௌலி மட்டுமே. அவருடைய நடிப்பில் அவரின் அனுபவம் பேசுகிறது. குறைவான காட்சிகளில் அர்ச்சனா நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று.
கோவிந்த் வஸந்தா பின்னணி இசையில் தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்தியிருக்கிறார். அவருக்குத் தீனி போடும் பல காட்சிகள் படத்தில் உள்ளன.
விஜய் சேதுபதி படம் என்று எதிர்பார்த்து போனால் அவருடைய நடிப்பில் அவர் ஏமாற்றவில்லை. முழு படத்தில் அவர் இல்லை என்றாலும் அதன் பின் வரும் காட்சிகள் அனைத்துமே சிரிப்புக்கு உத்தரவாதம். ஆத்மாவை வைத்து கூட ஒரு கதையை யோசிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.