சங்கு சக்கரம் – விமர்சனம்
குழந்தை நட்சத்திரங்களுடன் ஒரு குதூகலமான, கொண்டாட்டமான பேய்ப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். குட்டீஸ்கள் அனைவருக்கும் இந்தப் படத்தைப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரிசன்.
சங்கு சக்கரம் - டிசம்பரில் ஒரு தீபாவளி
பேய் படம் என்றாலே பயமுறுத்தும் பேய்ப் படங்களைப் பார்த்துதான் நமக்குப் பழக்கம். ஆனால், இந்தப் படத்தில் பேயை பயந்து ஓட வைத்திருக்கிறார்கள். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைப் பார்த்து பேய் இறங்கிவிடுகிறது.
ஒரே பேய் வீட்டிற்குள் முழுப் படமும் நகர்ந்தாலும் படம் போரடிக்கவில்லை. கலகலப்பாகவே நகர்கிறது. குழந்தைகளைக் கடத்தி மிரட்டி பணம் சம்பாதிப்பவரான திலீப் சுப்பராயன், அவருடைய ஆள் மூலம் சில குட்டீஸ்களை ஒரு பேய் வீட்டிற்குள் வரவைக்கிறார். அதே பேய் வீட்டிற்குள் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனும் செல்கிறான். அந்த வீட்டிற்குள் அவனைக் கொல்ல, அவனுடைய கார்டியனாக இருக்கும் இருவர் திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு காதல் ஜோடியும் அந்த வீட்டிற்குள் நுழைகிறது. அனைவருமே அங்குள்ள அம்மா பேய் கீதாவிடமும், அவருடைய மகள் பேய் மோனிகாவிடமும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வீட்டிற்குள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் நாயகன், நாயகி இல்லாமல் பேய் கதாபாத்திரங்களுடன், குழந்தைகள் மட்டும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து படங்கள் வந்ததே இல்லை. இப்படி ஒரு படத்தைக் கொடுக்க தைரியமும், துணிச்சலும் வேண்டும்.
படத்தில் நடித்துள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவருமே அவர்களது வீட்டில் எப்படி கலாட்ட செய்வார்களோ அப்படியே படத்திலும் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்டு பேய்தான் பேய் முழி முழிக்கிறது. பெரிய பேயாக கீதா, சின்ன பேயாக பேபி மோனிகா. கீதா மிரட்டுவதை விட அவர்தான் மிரண்டு போகிறார். சின்ன பேய் பேபி மோனிகா, பேய் மேக்கப்பில் கூட அழகாகத்தான் இருக்கிறார். அந்த குட்டிக் கண்களை வைத்து அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
குழந்தைகள் நடிக்கும் படங்களில் ஒரு கலகலப்பான காமெடி வில்லனாக திலீப் சுப்பராயன் ரசிக்க வைக்கிறார். டிசோசோவாக நடித்திருக்கும் ராஜா சீரியஸ் வில்லனாக இருக்கிறார்.
கிளைமாக்சுக்கு முன்பாக வரும் அந்த வெள்ளைக்காரரும், சீனாக்காரரும் கூட சிரிக்க வைக்கிறார்கள்.
ரவி கண்ணன் ஒளிப்பதிவும், ஷபீர் இசையும், ஜெயச்சந்திரன் அரங்க அமைப்பும், விஜய் வேலுகுட்டியின் படத் தொகுப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
ஒரு வீட்டிற்குள் கதை நகர்கிறது என்பது தெரியவில்லை. காட்சிகளில் எந்தத் தேக்கமும் இல்லாமல் படம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. குழந்தைகளை வைத்து இன்னும் கூட அதிக கலாட்டவான பல காட்சிகளை அமைத்திருந்தால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.