எப்படி வேண்டுமானாலும் “வளைந்துகொடுத்து’, தனது துறையில் சாதித்து, பேரும் புகழும் பெற வேண்டும் என்று இயங்குகிற ‘சுயநல லட்சியப்பெண் ஒருத்தியை, அவள் போலல்லாத, குடும்பப் பாங்கான எளிய இளைஞன் ஒருவன் காதலித்தால் என்னாகும் என்பது இப்படத்தின் ஒருவரிக்கதை.
தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்க அழைப்பு வர அதற்காக சவுண்ட் எஞ்சினியர் ருத்ராவை அமர்த்திக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார். காதுக்கு இனிமையான இசை அவர்களுக்குள் காதலையும் கொண்டு வந்து விடுகிறது.
ருத்ரா முதலில் தயங்க ஆனால் சுபிக்ஷாவோ அவரை துரத்தி துரத்தி காதலித்து ஒரு கட்டத்தில் போதை ஏற்றி படுக்கைக்கு அழைத்து எல்லா காரியங்களையும் முடித்து விடுகிறார். படுக்கையில் விழுந்த பின்தான் ருத்ரா காதலில் விழுகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்திய திருவிழா இசையை ஒளிப்பதிவு செய்ய எண்ணி சுபிக்ஷாவை நாடுகிறார். தனக்கு உதவியாக ருத்ராவையும் அழைத்துக்கொண்டு அந்த அசைன்மென்ட்டுக்கு புறப்படுகிறார் சுபிக்ஷா.
இந்த பயணம் தன் காதலை மேலும் வலுப்படுத்தும் என்று நினைத்த ருத்ராவுக்கு ஏமாற்றம். அந்த வெளிநாட்டுக்காரருடன் சுபிக்ஷா நெருக்கமாக பழகுவதைப் பார்த்து நொந்து போகிறார்.
போதாக்குறைக்கு வெளிநாட்டிலிருந்து சபிக்ஷாவுக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபன் என்று ஒருவன் வந்து சேர ருத்ராவும் சுபிக்ஷாவும் இணைய முடிந்ததா என்பதுதான் மிச்ச சொச்ச கதை.
அசப்பில் ஆரம்பகால கார்த்தி போல் இருக்கும் ருத்ரா ஹீரோவுக்கு உரிய இலக்கணங்களுடன் இருக்கிறார். ஆனால் காதலிக்கும் காட்சிகளில் கூட ஏன் சோகம் தூக்கலாய் முகத்தை அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. மலையாளியான அவர் தமிழில் பேச முடிவெடுத்ததை வரவேற்கலாம் – தப்பில்லை. ஆனால் மலையாளம் கலந்த தமிழ், அவரை அந்நியப்படுத்துகிறது.
கடுகு படத்தில் அறிமுகமான சுபிக்ஷா எண்ணையில் போட்ட கடுகாகப் பொரிந்து இளமைப் பூரிப்பாக இருக்கிறார். அவருடன் படுக்கையை பகிர்ந்த பின்பு ருத்ராவுக்கு அவர் பாத்திரத்தின் மேல் ஏற்படும் சந்தேகம் நமக்கு அவரை காதலிக்கும் முன்னாலேயே ஏற்பட்டுவிடுகிறது. அந்த அளவுக்கு எஃப் எம்மில் முதலாளி ஜொள்ளு விடும் அளவில் நெருக்கமாகப் பழகுகிறார் சுபிக்ஷா.
அது ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு பின்னால் ஒரு வலுவில்லாத காரணத்தைச் சொல்கிறார்கள்.சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
