சிறு வயதிலிருந்தே அனாதைகளாக இருந்து ஒரு திருநங்கை ஆதரவில் வளர்ந்தவர்கள் சரண் மற்றும் பாண்டி. அந்தத் திருநங்கையை யாரோ கொன்றுவிட சரண், பாண்டி அவர்களை பதிலுக்குக் கொன்றுவிட்டு சிறைக்கு வருகிறார்கள். சிறைக்குள் இருக்கும் பிருத்விக்கும், சரண் – பாண்டிக்கும் இடையில் மோதல் உருவாகிறது. சரணுக்காக பிருத்வியிடம் சண்டைக்குச் சென்று அடிபட்டு பாண்டி இறந்து போகிறார். அதன் பின் பிருத்வி சிறையை விட்டு விடுதலை ஆகிறார். தன் நண்பன் பாண்டி இறக்கக் காரணமாக இருந்த பிருத்வியை சிறையை விட்டு தப்பிச் சென்று கொல்ல நினைக்கிறார் சரண். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இளம் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஆகவும் இருக்கும். ஆனால், படத்தில் அதை சிறைச்சாலை ஆக மட்டுமே காட்டியிருக்கிறார் இயக்குனர். எந்த ஒரு காட்சியிலுமே அவர்கள் நல்ல விஷயத்தைப் பார்ப்பதாக படத்தில் காட்டப்படவேயில்லை என்பது ஒரு குறை. படம் முழுவதும் அவர்கள் வாழ்வின் கெட்ட பக்கங்களாகவே இருக்கிறது.
சரண், பிருத்வி, பசங்க படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஆகியோர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். சரண் தான் படத்தின் நாயகன். பிருத்வி வில்லன். பாண்டி கொஞ்ச நேரமே வந்து பரிதாபமாக இறந்து போகிறார். கிஷோர் ஒரு சிறு குற்றத்திற்காக சிறைக்கு வந்து, காதலியை மீண்டும் சந்திக்க மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கிறார். ஸ்ரீராமை முதலில் வில்லன் போலக் காட்டி பின்னர் அவரை வில்லன் இல்லை என்கிறார்கள்.
படம் முடிவடையும் நேரத்தில் சரணை ஒரு பெண் காதலிக்க ஆரம்பிக்கிறார். கிஷோருக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருக்கிறார். இளம் குற்றவாளிகள் என்றால் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்தானே. அப்புறம் எப்படி அவர்களுக்கு அந்த வயதில் காதல் என்பதெல்லாம். நடித்துள்ள ஒவ்வொருவரும் 25 வயது இளைஞர்களைப் போல இருக்கிறார்கள்.
இளம் குற்றவாளிகள் என்றால் கதையை வித்தியாசமாக சொல்ல வசதியாக இருக்கும் என இப்படி ஒரு கதைக்களத்தை இயக்குனர் தேர்வு செய்திருப்பார் போலிருக்கிறது. அதை லாஜிக்காக சொல்லியிருந்தால் இன்னும் கவனம் ஈர்த்திருக்கலாம்.
சிறைக்கான செட்டோ அல்லது பழைய கம்பெனியோ அதைக் காட்சிப்படுத்தியிருப்பது அருமை. லைட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என சிறைக்குள் இருக்கும் அனுபவம் கிடைக்கிறது.