படிக்கும் மாணவர்கள் மனதில் சாதிச்சாயம் பூச்சப்பட்டுவிட்டால், அவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும் என்கிற கருத்தை விதைத்திருக்கும் படமாக சாயம் வெளியாகியிருக்கிறது.
மென்மையான கதாபாத்திரங்களிலேயே இதுவரை நடித்து வந்த விஜய் விஷ்வா இப்படத்தின் மூலம் ஆக்ஷன் நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அத்தை பொண்ணை விட அதிகமாக நேசிக்கும் தனது நண்பனை சாதீய வன்மத்தில் கொலைசெய்துவிட்டோமே என்கிற உண்மையை உணரும் காட்சிகளிலும் அதற்கு காரணமானவனை போட்டுத்தள்ளும் காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நண்பனாக , இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் விஷ்வாவும் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் ஷைனி, முக்கிய நாயகியாக நடித்திருக்கும் ஷைனியை விட கவனிக்க வைத்திருக்கிறார்.
அனுபவ நடிகர்கள் பொன்வண்ணன், போஸ்வெங்கட், இளவரசு, சீதா ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வில்லன் காசியாகவும் வந்து மிரட்டியிருக்கிறார் இப்படத்தை இயக்கிய ஆண்டனி சாமி.
தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அடையாளப்படுத்தாமல், சாதிப்பாகுபாடு என்கிற அளவிலேயே காட்டியிருக்க வேண்டிய படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சமூகத்தை அடையாளப்படுத்தாமல், பாதிப்பு கொடுக்கும் சமூகமாக முக்குலத்தோர் சமூகம் என்று அப்பட்டமாக காட்சிப்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்.
மற்றபடி நேதாஜியையும் அம்பேத்காரையும் என்னைக்குடா சாதித்தலைவனா ஆக்கினீங்க என்கிற கேள்வியால் ஆண்டனி சாமி தனித்து தெரிகிறார்.
