6.3 C
New York
Thursday, April 25, 2024

Buy now

“Nedumi” Trailer Launched

உடம்பைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டம் கொடுக்கும் கள் எவ்வளவோ மேல்: இயக்குநர் பேரரசு பேச்சு!

ஆண்ட கட்சி ஆளுகிற கட்சியை விட தனித்து நிற்கும் கட்சியை நம்பாதீர்கள்: பத்திரிகையாளர் முக்தார் அகமது பேச்சு!

நான் ஒரு பனையேறி தான், இதைச் சொல்வதில் எனக்குப் பெருமைதான் : பயில்வான் ரங்கநாதன் பேச்சு!

எனக்கு எவ்வளவு நஷ்டம் வரும்? என்று கேட்டுக் கொண்டே ‘நெடுமி ‘ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்!

டாஸ்மாக் கடைகளில் கள்ளை விற்கலாம்: இயக்குநர் பேரரசு பரிந்துரை!

கதையைத்தான் திருடினீர்கள்;சூப்பர் சார் பட்டத்தையும் திருடுவீர்களா? பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கேள்வி!

படப்பிடிப்பு நாட்களில் வெறும் காலுடன் செருப்பில்லாமல் நடந்தேன்: ‘நெடுமி ‘ பட நடிகர் பேச்சு!

நான் என் கைக் குழந்தையுடன் வந்திருக்கிறேன்; அதை மறைக்க விரும்பவில்லை: ‘நெடுமி’ நாயகி அபிநயா வெளிப்படைப் பேச்சு!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.
ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது,

” இதை ஒரு குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை ஆல்பங்கள் என்று அவர்கள் முதலில் செய்திருக்கிறார்கள். படம் எடுப்பார்கள் என்று நான் முதலில் நம்பவில்லை. பிறகு போகப் போக ஈடுபாடு ஏற்பட்டது .இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது” என்றார்.

கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது,

“முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்.” என்றார்.

படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது,

“வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன்.ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,

” இந்த இயக்குநர் நந்தா எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கம் .எனக்கு ஒரு பாசிட்டிவான வேடத்தை கொடுத்துள்ளார். ஒரு நாள் தான் படப்பிடிப்பு. போய் நடித்த போது திருப்தியாக இருந்தது . பனைமரத்தைப் பாராட்டிப் பேசுகிற மாதிரி ஒரு காட்சி. நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்.பனையேறிகள் அனைவரும் இன்று சிறப்பான வாழ்க்கையில் இல்லை. சிரமப்பட்டுத் தான் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது,

“இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது,

“இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம்.
இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க்.
இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது,

“பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது.பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும் சொல்லப்படும் விஷயத்தாலும் இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது” என்றார்.

டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

” சினிமாவில் நிறைய அவமானங்களைச் சந்தித்து தான் மேலே வர வேண்டும்.சினிமாவில் யாரிடம் ஏமாறக்கூடாது என்று யாராவது விளக்கி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சினிமாவில் ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் .அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்” என்றார்.

பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது,

” இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

‘காவல் தெய்வம் ‘படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார்.
நடிகர் திலகம் அந்த படத்தில்
சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.

இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.
பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான்.
அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை.

இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.

பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது.அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள் என்றும் சிரமப்பட்டதில்லை.

பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு .அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள்.

நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால் .ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள்.
படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ?முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்.

நான் எதையும் நேரடியாகப் பேசுபவன்.என்னை எப்போதும் தாக்கிப் பேசி வரும் கே .ராஜன் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று வர நான் வேண்டுகிறேன்.

இங்கே பேரரசு இருக்கிறார். அவர் ஒரு மேடையில் பேசினார். பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர் தான். அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால் நான் அப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்கிறேன் .இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன்.

நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒரு வர்தான்.அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும்.
இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான்.அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?
இதுவரை கதையைத் திருடினீர்கள்.இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? “என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,

” இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.பாண்டிச்சேரியில் நிறைய படப்பிடிப்பு நடக்கும் . அதை வேடிக்கை பார்த்த மக்களே விவரமாக இருப்பார்கள்.இதை நான் என் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன். பாண்டிச்சேரியில் இப்படி சினிமா எடுத்திருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இவர்களே தனியாக எந்தவிதமான முன்னனுபவமும் இல்லாமல் படம் எடுப்பதை அறிந்து நான் நேரில் போய்ச் சந்தித்துப் பேசினேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சினிமா ஆர்வத்தை நாம் மதித்து, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசும்போது,

“விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள்.

திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் .ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களேஅவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள்.

பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன .இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன?

பத்திரிகையாளர்கள் என்றும் மக்கள் பிரதிநிதியாக நின்று கேள்வி கேட்க வேண்டும்.

தொலைக்காட்சி பேட்டிகளை ஒரு காலத்தில் மக்கள் இது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்று மக்கள் கடந்து போனார்கள். நான் மக்கள் பிரதிநிதியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு தான் மக்கள் அதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.இவன் நம் சார்பில் நின்று கேள்வி கேட்கிறான் என்று நினைத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் ராணுவத்தினர்,காவல்துறையினரைப் போன்றவர்கள்.அவர்களைப் போலவே பத்திரிகையாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள், தங்கள் வீட்டு இன்ப துன்பங்களை மறந்து களத்தில் நிற்பவர்கள். எந்த விழாக் கொண்டாட்டமும் அவர்களுக்குக் கிடையாது.மழையா? வெள்ளமா ?புயலா ? சுனாமியா?எங்கும் களத்தில் நிற்பவர்கள். அந்தப் பத்திரிகையாளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

திராவிடம் தமிழ் தேசியம் என்கிற நிலையில் என்னை திருமா கவர்ந்த தலைவராக இருக்கிறார்.

அதேபோல் ரஜினிகாந்த் பற்றி நான் ஆயிரம் விமர்சனங்கள்செய்திருக்கிறேன்.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்றார். பிறகு அது தவறு என்று புரிகிற போது அதை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது .கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். இது ரஜினி கொடுத்துள்ள பாடம்.அந்தத் தெளிவான முடிவு எடுத்தவகையில் அவர் என்னைக் கவர்ந்த ஒருவராகத் தெரிகிறார்.

இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன்.

பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்!

இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள்.
உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.
கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார்.நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு.என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள் ;ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள்.இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை?

மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது.

அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது.

நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.

மேலும் இந்த விழாவில்
யூடியூபர் காத்து கருப்பு கலை,ஐ .ஜி. பாஸ்கரன்,படத்தில் பணியாற்றியவர்கள் ,படக்குழுவினரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE