கொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிவா (கோகுல் ஆனந்த்) பொறுப்பேதும் இல்லாமல் சுற்றுகிறார். அவருக்கும் மதுவுக்கும் கள்ள தொடர்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது. இந்த விவகாரத்தை கார்த்திக்கிடம் போட்டுக்கொடுத்த உறவுக்கார இளைஞன் குரு (அருவி பாலா) போலீஸ் வழக்கில் சிக்குகிறான். அதிலிருந்து விடுபட போலீஸ் அதிகாரி ரூ 10 லட்சம் லஞ்சம் கேட்கிறார். அதை தருவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறான் குரு. இதன் முடிவு பரபரப்பு த்ரில்லுடன் அமைகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் காதல் பரத் தனது பெயரை பரத் நிவாஸ் என்று மாற்றிக்கொண்டு இதில் நடித்திருக்கிறார். டீ நிறுவன நிர்வாகி என்பதால் ஜென்டிலான கதாபாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மனைவி அபர்ணா வினோத் குடும்பத்தில் நல்லவர்போல் த்ன்னை காட்டிக்கொண்டு பரத் நண்பரிடம் கள்ள உறவு வைத்திருப்பது கதாபாத்திரத்தின் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் பரத் தன்னிடம் சரியாக பேச மறுப்பதை அறிந்து தனது கள்ள உறவை துண்டித்துக்கொள்கிறார். இனியாவது கணவருக்கு விசுவாசமாக இருப்பது என்ற முடிவெடுக்கும்போது அபர்ணாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மன்னிப்பு பெறுகிறது.
கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருக்கும் பரத்துக்கு ஆக்ஷன் காட்சிகள் குறைவுதான் ஆனால் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நண்பனே தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டானே என்ற ஆத்திரத்தில் அவரை தாக்கி கொல்லும்போது கோபத்தை கொட்டி இருக்கிறார் பரத்.
எந்நேரமும் குடித்துக்கொண்டு பொறுபில்லாமல் திரியும் கோகுல் ஆனந்த் கடுப்பான விஷயங்கள் செய்து வில்லனாக மாறி இருக்கிறார்.
தரண்குமார் இசை அமைத்திருக்கிறார். கொடைக்கானலின் அழகை ரம்யமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா.
கணவன், மனைவி என்று ஒரு குடும்பத்தின் கதையை கருவாக கொண்டு அதில் த்ரில்லான விஷயங்களை கோர்த்து கிளைமாசில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் ஷரங்கின் இயக்கம் பாராட்டத்தக்கது.
