12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

Murungakkai chips Audio Launch

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய….

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது…

நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவரிடமும் படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன். அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் யோகிபாபு கூறியதாவது…

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ரவீந்தர் சார், இயக்குநர் அனைவருக்கும் நன்றி. சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன் வாய்ப்புக்காக நின்றிருப்பேன், அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது. அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது…

இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர் அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார் உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை அதனால் அவர் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் ஷோபி கூறியதாவது…

நிறைய படங்கள் செய்கிறோம் ஆனால் நாம் நினைத்தது எல்லாவற்றையும் செய்து விட முடியாது ஆனால் இந்தப்படத்தில் நாங்களே தயங்கினாலும் ரவீந்தர் நினைத்தது எல்லாவற்றையும் செய்யுங்கள் என்று சொன்னார், அவருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகை மதுமிதா கூறியதாவது…

இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எனக்கு இது இரண்டாவது படம் நான் மயில்சாமி, மனோபாலா சார் இணைந்து நன்றாக காமெடி செய்திருக்கிறோம். தயாரிப்பாளர் மிகவும் ஸ்வீட்டானவர் மிகவும் கூலாகவே இருப்பார். அவரது மனதிற்கு நன்றி. இந்தபடத்தில் அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம்

தயாரிப்பாளர் சித்ரா லக்‌ஷ்மண் பேசியதாவது…

சாந்தனுவை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும், அவரிடம் எனக்கு பிடித்தது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி. அவரது உழைப்புக்கு கண்டிப்பாக ஜெயிப்பார். இந்தப்படத்தின் கதையை கேட்டபோதே முழுதாக சிரித்ததாக சொன்னார்கள். இப்போது யாரும் கதையை முழுதாக ரெடி செய்துகொண்டு படப்பிடிப்புக்கு போவதில்லை, அந்த வகையில் இந்த டீம் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் ரவீந்திரன் நிறைய அனுபவம் கொண்டவர் ஆரம்பத்தில் நிறைய தடைகளை கடந்து கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வராவிட்டால் மிர்ச்சி சிவாவுக்கு இந்த அளவு டான்ஸ் தெரியும் என்பது தெரியாமல் போயிருக்கும் அவரை டான்ஸ் மாஸ்டராக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தப்படத்தை காமெடி கொண்டாட்டமாக உருவாக்கியிருக்கிறார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மயில்சாமி கூறியதாவது….

என்னுடைய குருநாதர் பாக்யராஜ் சார் தான். நான் ஒரு நடிகரை பார்த்து வர வேண்டும் என நினைத்தது சுருளிராஜன் சார். நான் ஆரம்பத்தில் பாக்யராஜ் சாரிடம் வாய்ப்பு கேட்டு நடித்து அவரை டார்ச்சர் செய்திருக்கிறேன். பாக்யராஜ் எம் ஜி ஆர் ஆவி வருவது போல் ஒரு படம் எடுத்தார். அதில் எம் ஜி ஆருக்கு நான் தான் வாய்ஸ் குடுத்தேன் அதை எனக்கு கிடைத்த கௌரவமாக நினைக்கிறேன். இந்தப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக செலவு செய்து, காட்சிக்கு என்ன வேண்டுமோ அதை செய்து எடுத்துள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படம் மிக அற்புதமான நகைச்சுவை படமாக இருக்கும். எல்லோரும் நன்றாகவே காமெடி செய்திருக்கிறோம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது…

முருங்கைக்காய் சிப்ஸ் பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் ரவீந்தரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு நன்றாக நடிக்க வரும், வில்லனாக வாங்க சார் என்று சொன்னேன் இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். எத்தனை தோல்வி அடைந்தாலும், அதை கடந்து வருகிறார் ரவீந்தர் மாதிரி தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியம். சாந்தனு YouTube சேனலில் கலக்கி வருகிறார். அவர் ஒரு படத்தை எழுதி இயக்கி நடிக்க வேண்டும். நாயகி அதுல்யா நன்றாக நடித்திருக்கிறார். தரணின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பராக இருந்தது. தியேட்டருக்கு ரசிகர்கள் திரும்ப வர ஆரம்பித்துள்ளது நிறைய மகிழ்ச்சியை தருகிறது. நிறைய படங்கள் வர வேண்டும், ஜெயிக்க வேண்டும்.

தயாரிப்பாளர் CV குமார் கூறியதாவது…

எத்தனையோ தோல்விகளை தாண்டி சினிமா செய்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அவர் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது…

ரவீந்தர் மிக நல்ல மனிதர். சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பேரை அடித்தோம் என்பது முக்கியமில்லை எவ்வளவு பேரிடம் அடி வாங்கினோம் என்பதே முக்கியம். அது போல் எத்தனையோ தடைகளை தாண்டி சினிமா செய்கிறார் அவர் ஜெயிக்க வேண்டும். சாந்தனு எப்போதோ ஜெயிக்க வேண்டியவர் அவர் கடின உழைப்பிற்காக கண்டிப்பாக ஜெயிப்பார் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் PL தேனப்பன் கூறியதாவது…

இந்த மேடையிலுள்ள அனைவரும் தயாரிப்பாளரை வாழ்த்துவதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் ஶ்ரீஜர் கூறியதாவது….

நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு திரைக்கதை எழுத முன்னுதாரணமாக இருந்தது பாக்யராஜ் சாரின் ‘திரைக்கதை பேசலாம் வாங்க’ புத்தகம் தான். அவரை வைத்து இயக்கியது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இயக்குநர் வாசு சாரின் மகன் சக்தி தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. தயாரிப்பாளருக்கு லைன் சொன்னவுடனே அவருக்கு பிடித்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை 2 வருடம் உழைத்து உருவாக்கியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டவுடனே உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார். சாந்தனுவுக்கும் கேட்டவுடன் இந்தப்படம் பிடித்துவிட்டது. இந்த டைட்டிலை தந்தது தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளரின் அக்கறை தான் படம் நன்றாக வர காரணம். ஒளிப்பதிவாளர் ரமேஷ் அதிகம் பேச மாட்டார் இப்படம் விரைவாக முடிக்க காரணம் அவர் தான். இசையமைப்பாளர் தரண், படம் ரசிகர்களிடம் சென்று சேர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. அதுல்யா திறமையான தமிழ் பேசும் நடிகை நன்றாக நடித்திருக்கிறார். இந்தப்படம் முழுதாக உருவாக முழுக்காரணமாக இருந்தவர் சாந்தனு தான். அவரது கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் ஒரு காமெடி கலாட்டாவாக உங்களை திருப்தி படுத்தும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.

நடிகை அதுல்யா கூறியதாவது…

முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி. நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது…

எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள். இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார். இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த புரடியூசர் இல்ல ஆனா நல்ல புரடியூசர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. இந்தப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம்.

இசையமைப்பாளர் தரண் கூறியதாவது..

பாக்யராஜ் சார் என் குரு இந்த மேடையில் நிற்க அவர் தான் காரணம். அவர் ஆபிஸில் நானும் நின்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை தான் அவரை பார்த்தேன் உடனே வாய்ப்பு கிடைத்தது. அது என் பாக்கியம். ரவீந்திரன் சார் போன் செய்து ஏ ஆர் ரஹ்மான் மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டார். இப்போது மேடையில் நான் எந்தெந்த பாடல் எல்லாம் காப்பி அடித்து போட்டிருக்கிறேன் என்று சொன்னார் நன்றி. இந்தப்படத்தில் அவர் ஒரு பாடலும் எழுதினார். அவர் பாடலுக்கு செலவு செய்ததிலேயே இரண்டு படங்கள் எடுத்திருக்க முடியும் அவ்வளவு செய்திருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள் சோனி கம்பெனிக்கும் நன்றி. ஹிட்டாகும் படங்களில் கூட இப்போது பாடல்கள் முன்பை போல் வரவேற்பை பெறுவதில்லை. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் இயக்குநர் பாக்யராஜ் கூறுயதாவது…

நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார். அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார். தரண் தான் இன்றைய நாயகன் நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவா தான் டான்ஸில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார். முருங்கைக்காய் சிப்ஸ் என்றவுடன் முதலில் நான் எடுத்த, அந்த காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி முதலில் பலமுறை எடுக்க நினைத்து, காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது புகழ் பெற்றிருப்பது சந்தோஷம். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களை பெற்றிருப்பது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. நாயகி கோயம்புத்தூர் என்பதே முதலில் தெரியாது அவர் ஆங்கிலத்தில் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன் பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார். எல்லோருக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இயக்கம் - ஶ்ரீஜர்
இசை - தரண்
ஒளிப்பதிவு - ரமேஷ் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு - ஜோமின்
கலை - நர்மதா வேணி
ஸ்டண்ட் - ஆக்சன் நூர்
உடை வடிவமைப்பு - ஹினா, நிவேதா ஜோசப்
DI - Accel Media
VFX - வெங்கி சந்திரசேகர்
புரடக்சன் கன்ட்ரோலர் - மனோகர் ஶ்ரீகாந்த்
லைன் புரடியூசர் - வருண் சந்திரன்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் - அசோகன்
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்
ஸ்டில்ஸ் - ராஜா
விளம்பர வடிவமைப்பு - தண்டோரா

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE