Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
நாயகி நிக்கிகல்ராணி பேசியதாவது..
இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். இந்தப்படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்தபடக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது, சந்தோஷம். இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே டார்லிங், மரகத நாணயம் படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.
இயக்குநர் ராம் பாலா பேசியதாவது…
“இடியட்” படத்திலேயே நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதைவை பார்த்து விட்டேன் நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்க்கும் அவருக்கு சொல்ல வேண்டும் மிகச்சிறப்பான நடிகை. நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும் அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும். ஆனந்தராஜ் எனக்கு சீனியர் முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார். ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன் இன்னும் பல படங்கள் செய்வேன். மயில்சாமி மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம் தான். எனது உதவியாளர்கள் தான் இந்தப்படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள். சிவா காலையில் ஷூட்டிங்கிற்கு வரும்போதே, சிரித்து கொண்டே வருவார், முடிந்து செல்லும்போதும் அந்தப்புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது…
இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப்படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார். மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர் தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி.