வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, “நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்..
இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..
இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.. ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்” என்றார்
நடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன் பேசும்போது, “ஸ்ரீ பிரியங்கா வருத்தப்பட தேவையில்லை இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும்.. ஆனால் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும்.. நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள்.. அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம். ஆனால் இப்போதுள்ள படங்களில் குடும்பம் பந்தம் பற்றி காணப்படுவதில்லை அப்படிப்பட்ட படங்கள் வரும்போது தான் பெண்கள் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்“ என கூறினார்.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்..
படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை..
நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது.. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது.. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரியவருகிறது.
தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்.. நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன் ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்” என்றார்.