மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது..! என்று சிந்தித்தேன். விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். அவர் மும்பை வந்திருந்தபோதும் சந்தித்து உரையாடினோம். இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே..! என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.
நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகிறது. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.
மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார். என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார். விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்'' என்றார்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில், '' எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது கூட ஆச்சரியமாக இருக்கிறது. சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில விசயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம். பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவருடைய சிறப்பம்சமே காணொளி வாயிலான உரையாடலை வீடியோவாக எடுத்து அனுப்புவது தான்.
அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் 'ஏக் ஹசீனா தி'. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்' எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.
அதன் பிறகு என்னை சந்தித்து 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு.. ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சௌகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளரும், கதாசிரியரும், பட தொகுப்பாளருமான பூஜா மேடம். அவர்கள் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.
கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.
நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'ஃபார்ஸி' படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.
பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை.
இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். '' என்றார்.
நடிகை கத்ரீனா கைஃப் பேசுகையில், '' சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் என்னுடைய தாயார் ஒன்பது வருடங்கள் மதுரையில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் மிகவும் உற்சாகமடைந்தேன். முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறோம். அதுவும் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்து உருவாக்கும் படத்தில் நடிக்கிறோம். இதற்கு முன் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் விஜய் சேதுபதியும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார் அதில் 'ரொம்ப கஷ்டமாக இருந்தது' என்ற வார்த்தையை பேசுவேன். படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு நடிகை தீபா வெங்கட் உதவி செய்தார்'' என்றார்.
பாடலாசிரியர் யுக பாரதி பேசுகையில், ''
மாடர்ன் லவ் சென்னை என்ற இணைய தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடனும், இளையராஜாவுடனும் பணியாற்றும் போது.. நான் தமிழ் திரையுலகில் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றும்போது வித்தியாசமாக இருந்தது. அதன் போது தான் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இந்தி திரைப்படத்தில் பணியாற்றுகிறீர்களா? என கேட்டார். அப்போது எனக்கு ஹிந்தி தெரியாதே..! என்று சொன்னேன். அப்போது அந்த திரைப்படம் தமிழிலும் உருவாகிறது என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீராம் ராகவனை பற்றி விவரித்தார். அவரது இயக்கத்தில் வெளியான 'பட்லாபூர்' மற்றும் 'அந்தாதூன்' படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது, தியாகராஜன் தியாகராஜாவிடம் ஸ்ரீராம் ராகவனுக்கு தமிழ் தெரியுமா? என கேட்டேன். அதன் பிறகு அவர், என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தப் படத்தில் பணியாற்றும்போது வழக்கமானதை போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. விஜய் சேதுபதி சொன்னது போல் ஸ்ரீராம் ராகவன் அனைவரையும் முதலில் மனதளவில் தயார்ப்படுத்தி விடுவார். இந்தப் படத்தின் காட்சிகளை படமாக்கிய பிறகு பாடல்களை எழுதத் தொடங்கினோம். அவர் படத்தை முழுவதுமாக திரையிட்டு காட்டி விட்டு.. இந்தெந்த இடங்களில் பாடல்கள் வரலாம் என எண்ணியிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதுடன், இந்த சூழலில் தமிழ் படத்தில் இதற்கு முன் என்னென்ன பாடல்கள் வந்திருக்கிறது என்ற காணொளி தொகுப்பையும் காண்பித்தார். அவை அனைத்தும் தமிழில் வெற்றி பெற்ற படங்களில் இடம்பெற்ற ஹிட்டான பாடல்கள். அதுவரை எனக்கு பாடலுக்கான மெட்டு தெரியாது. அதன் பிறகு அந்த மெட்டை கேட்க விட்டு.. இந்தெந்த இடங்களில் இந்த கருத்துக்களை சொல்லலாமா.. அல்லது என்ன சொல்லலாம்? என்பதை யோசியுங்கள். அதன் பிறகு எழுதலாம் என்றார்.
அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. எனக்கு பணியாற்றுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதிலும் ஆய்வு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுத வேண்டியதிருந்தது. நான் தமிழில் எழுதி அனுப்பியதை அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர். அதன் பிறகு என்னிடம் சில சந்தேகங்களை கேட்பார். அந்த சந்தேகங்கள் அனைத்தும் இந்தப் பாடலில் எளிமை இடம்பெற வேண்டும் என்பதாக இருந்தது.
மெட்டுக்கள் இந்தியில் இருந்தது. எந்த பாடலும் அந்த மெட்டுக்கு ஏற்ப எழுதாமல் தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது.
அதன் பிறகு பாடல் பதிவின்போதும் என்னை அழைத்து, மொழி உச்சரிப்பு குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கினர். இதற்காக இசையமைப்பாளர் பிரீத்தம் அவர்களுக்கும், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.