ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கோலிவுட்டிற்கு காலடியெடுத்து வைத்திருக்கிறார் விமல். புகழ் பெற்ற இயக்குனர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ என்ற படைப்பின் மூலம் விமல் ரீ எண்ட்ரீ ஆகியுள்ளார்.
நாயகன் விமல் சட்ட படிப்பு படித்து வருகிறார். இவரது மாமனாக வருகிறார் ரோபோ ஷங்கர். படத்தின் ஆரம்பம் முதல் இருவரின் காமெடி கலாட்டா அரங்கேறுகிறது. பின், நாயகி ஆனந்தி எண்ட்ரீ. நாயகியுடனான காதல், என ஒரு புறம் கதை நகர, விமலின் அப்பாவாக வரும் பிரபு, ஊருக்கு நண்மை புரிய வில்லனின் பகையை சம்பாதிக்கிறார்.
இந்நிலையில் ஆனந்தியின் அக்காவாக வரும் சாந்தினியை, விமலின் அண்ணன் கார்த்திக் விரும்ப, திருமண பந்தலில் இருந்து அண்ணனுக்காக சாந்தினியை தூக்கி செல்கிறார் விமல்.
சாந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணத்தை நடத்தி வைத்த கையோடு விமல் சாந்தினி குடும்பத்தையும் தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்து வைக்கிறார்.
திடீரென விமலின் காதலுக்கு ஆனந்தியின் அண்ணன் இடையூறு ஏற்படுத்த, இவர்கள் காதல் கைகூடியதா, வில்லனை விமல் சமாளித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதையாக உள்ளது.
களவானி படத்தில் பார்த்த விமலை மீண்டும் திரையில் நடிப்போடு பார்த்தது ஆச்சர்யம் தான். ஆக்ஷன் களத்தோடு அனைவரையும் ஆச்சர்ய பட வைத்திருக்கிறார். காதல் காட்சிகளாக இருக்கட்டும், ஆக்ஷன் காட்சியாக இருக்கட்டும், செண்டிமெண்டாக இருக்கட்டும் அனைத்திலும் நல்ல ஒரு நடிப்பின் முன்னேற்றத்தை அடியெடுத்து வைத்திருக்கிறார்.
படத்தின் நாயகி ஆனந்தி க்யூட்டாக வந்து அனைவரையும் கவர்கிறார். இவரின் நடிப்பையும் நிச்சயம் வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும். பிரபு, சரண்யா பொன்வண்ணன், சாந்தினி, வம்சி கிருஷ்ணன், ஜெயபிரகாஷ் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, யோகி பாபு என காமெடிக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்வது படத்திற்கு பலம் தான்.
ஜேக்ஸ் பிஜோய் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசையும் கதையோடு பயணம் தான். தனுஷ், விஷால் என பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய பூபதி பாண்டியனின் இப்படத்தின் கதாநாயகன் தேர்வு சரிதான்.
முதல் பாதியின் சுறுசுறுப்பு சற்று சலுப்படைய வைத்தாலும் இரண்டாம் பாதியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது கதையின் ஓட்டம்.