மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
“அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்” என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மாமனிதன் படத்தின் கதை.
எந்த வேடத்தை கொடுத்தாலும் தூக்கிச்சாப்பிட்டுருவாருய்யா என்கிற பெயரை விஜய்சேதுபதி எப்போதோ எடுத்துவிட்டார். சீனுராமசாமி படமென்றால் கேட்கவா வேண்டும். எந்த இடத்திலும் ஒரு நடிகர் இந்த வேடத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் உணர்ந்துவிடமுடியாத படி, வாழ்ந்திருக்கிறார், ராதா கிருஷ்ணனாக.காயத்ரி, ஒரு நடுத்தர வயது இளம்பெண், ஆட்டோக்காரர் மனைவி, அவரது இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்று கற்பனை செய்துவிட முடியாத அளவிற்கு அசாத்தியமான ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். கேரளாவில் ஒரு கிறுத்துவ குடும்பம் விஜய்சேதுபதிக்கு உதவுகிறது, உள்ளூரில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தலைவராக குரு சோமசுந்தரம் என்று பொறுப்புள்ள படைப்பாளியாக மதநல்லிணக்க வகுப்பு எடுத்திருக்கிறார் சீனுராமசாமி.
