காதலை பிரதானப்படுத்தாமல் இரு இளசுகள் கல்வி கற்க சாதி வெறியர்களை எதிர்த்து போராடுவது படத்தின் பிரதான கரு என்பது பாராட்டதக்க விஷயம்.நாயகன் விக்னேஷும், சமூகத்தால் உயர் சாதி என்று குறிப்பிடப்பட்ட ஒரு குடும்பத்துப் பெண்ணான ஆராவும், சிறு வயது முதல் ஒரே பள்ளியில் பயின்றுவர நட்பு காதல் அவதாரம் எடுக்கிறது. அங்கு ஆரம்பித்த பிரளயத்தின் விளைவு இந்த “குழலி”. தோட்டத்தில் மயங்கி விழும் ஆராவை வைத்தி யரிடம் விக்னேஷ் டூவீலரில் அழைத்து வர அதைக் காணும் சாதிக் காரர்கள் விக்னேஷை தாக்க வரும் முதல் காட்சியே கதை சாதி வெறியர் களின் தோலுரிக்கப் போகிறது என்ற புரிதலை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் அதையே சீனுக்கு சீன் வைத்து சலிப்பு தட்டச் செய்யாமல் விக்னேஷ், ஆராவின் காதல் அழகை காட்டி, காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார் இயக்குனர்.இளம்ஜோடிகளாக விக்னேஷ், ஆரா நடித்திருக்கின்றனர். புதுமலர்கள்போல் இருவரும் இளமை ததும்ப ஜொலிக்கின் றனர்.ஒரு அழுத்தமான, கொஞ்சம் திமிரான கிராமத்து கதாபாத்திரத்தில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் நாயகியாக வரும் ஆரா. அவரது அந்த கனத்த குரல் கூட அந்த கிராமத்து குழலி கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. அவருக்கு தோழியாக வருபவரும், அத்தோழியின் முறைமாமனாக வருபவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரம் கிராமத்து இயல்பு மாறாமலும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.விக்னேஷின் அப்பாவாக வரும் அலெக்ஸும் ஆராவின் தாயாக வரும் செந்தியும் கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துவிட்டனர்.பிற பாத்திரங்களில் வரும் யாவரும் புதுமுகங்களே ஆனாலும் அப்படித் தெரியாமல் அவர்களது இயல்பான நடிப்பு நம்மை அந்த கிராமத்துக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது.இயக்குனர் சேரா கலையரசன் கிராமத்தில் உலவும் சாதிய கொடுமையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.எல்லா சாதிய கொடுமைகளும் நடந்து கொண்டிருந்தும் பள்ளிகளில் இன்னும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஆசிரியை சொல்லிக் கொடுக்க அதை கோரசாக மாணவர்களும் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை கேலிக்குரியது என்று விளக்கி இருப்பது இயக்குனரின் குரலாக ஒலிக்கிறது.
