கனா’ என்ற தன் முதல் படத்திலேயே தன் கனவை நிஜத்திலும், கதையின் நாயகி ஐஸ்வர்யாவின் கனவை படத்திலும் வெற்றி பெற வைத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வரவே எதிர்ப்பு இருந்தது. பின்னர் வெளியில் வந்தார்கள். சைக்கிள் ஓட்டினார்கள், வேலைக்குச் சென்றார்கள், இன்று விமானத்தையும் ஓட்டுகிறார்கள். விளையாட்டு உள்ளிட்ட பலவற்றில் நுழைந்து சாதனைப் பெண்களாக வலம் வருகிறார்கள்.
அப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்து சாதிக்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் கனவை ‘கனா’வாக கண்கலங்க வைக்கும் விதத்திலும், யோசிக்க வைக்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
குளித்தலை ஊரில் பள்ளியில் படிக்கும் மாணவி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடுவது ஆசை. ஊரில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார். ஆனால், அதற்கு அம்மா ரமா எதிர்ப்பாக இருக்கிறார். கிரிக்கெட்டில் தீராத காதல் கொண்ட அப்பா சத்யராஜ் மகளுக்கு ஆதரவாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு உயர்கிறார் ஐஸ்வர்யா. உலகக் கோப்பை வெல்லும் அணியில் இடம் பிடிக்கிறார். அதன் பின் நாட்டுக்காக விளையாடி கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் போதே விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பள்ளி செல்லும் பெண்ணாக கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக அப்படியே கிராமத்துப் பெண்ணை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். கிராமத்திலிருந்து வேறு சூழலுக்குச் செல்லும் பெண்கள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள். அரசியல் சூழ்ந்த இந்த நாட்டில் பணம் படைத்தவர்களுக்குத்தான் பல விஷயங்கள் எளிதாக நடக்கின்றன. ஐஸ்வர்யாவிற்கு இந்தப் படம் நிச்சயம் சிறந்த ஒரு விருதைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
மூத்த நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை விட சிறந்த கதாபாத்திரங்களில் இன்றும் நடித்து வரும் ஒரே நடிகர் சத்யராஜ் மட்டுமே. தன் அன்பு மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல், மகள் நினைத்ததை நடத்தித் தர முயலும் இது போன்ற அப்பாக்கள் கிடைக்கும் மகள்களும், மகன்களும் புண்ணியம் செய்தவர்களே.
ஐஸ்வர்யாவுக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காக தர்ஷன். ஆனாலும், காதல் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். ஐஸ்வர்யாவின் அம்மாவாக ரமா. ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைக்குள் இருக்கும் ஒரு அம்மா. சத்யராஜ் நண்பராக இளவரசு. அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளில் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
திபு நைனன் தாமஸ் இசையில் பின்னணி இசை தித்திப்பு. எமோஷனலான பல காட்சிகள் படத்தில் உண்டு. அவற்றை தன் பின்னணி இசையால் மேலும் உயிரூட்டுகிறார்.
ஐஸ்வர்யா இந்திய அணியில் இடம் பெற்ற பின்னும் அவருடைய வீட்டை பாங்க் ஆட்கள் ஜப்தி நடவடிக்கையில் இறங்குவது நம்பும்படி இல்லை. பாங்க் சம்பந்தப்பட்ட காட்சிகள் யதார்த்தத்தை மீறியவையாக இருக்கின்றன, அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
கிரிக்கெட் படமாக மட்டும் இருந்துவிடாமல் விவசாயத்தைப் பற்றிய படமாகவும் இந்தப் படத்தைக் கொடுத்ததற்காக படக் குழுவுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.
சிவகார்த்திகேயன் கலகலப்பான கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளராக எந்த மாதிரியான படங்களைக் கொடுக்க வேண்டும் என இந்த ‘கனா’ மூலம் நிரூபித்திருக்கிறார். அது அப்படியே தொடர வாழ்த்துகள்.