27.4 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Imaikka Nodigal movie news

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் "இமைக்கா நொடிகள்". டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
 
படத்தை துவங்கும்போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களை தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஆர்டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம். முதல் படத்தில் அதை செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உதவி இயக்குனர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்து விட்டோம். குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம்,  அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன், ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்து கொடுத்தார் என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
 
என்னை விரும்புகிற, ரசிக்கிறவர்களின் படங்களில் நான் வேலை செய்ய விரும்புவேன். அப்படி என்னை ரசித்த அஜய் படத்தில் நான் வேலை செய்தேன். ஆக்‌ஷன், காமெடி, காதல் என எல்லாமே இந்த படத்தில் இருந்தது. ஆண்டனிக்கு பிறகு இந்த படத்தின் எடிட்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பில் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையிலேயே இருப்பவர் அஜய். தயாரிப்பாளர் ஜெயகுமார் செலவை பற்றி கவலைப்படாமல் இயக்குனர் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தார் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர்.
 
துப்பாக்கியில் இருந்து அஜய் உடனான என் நட்பு தொடர்கிறது. இந்த படத்தை ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. ஒவ்வொரு கலைஞரையும் தன்னோடு அரவணைத்து அழைத்து செல்பவர். ஒரு விஷயம் சரியாக வரும் வரை விடமாட்டார் அஜய் என்றார் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்.
 
திரில்லர் எனக்கு மிகவும் பிடித்த ஜானர். இதில் திரைக்கதையில் புகுந்து விளையாடலாம். இரண்டு மணி நேரம் இமைக்காமல் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த தலைப்பை வைத்திருக்கிறோம். விமர்சகர்களையும் இந்த படம் திருப்திப்படுத்தும் என்று நான் உறுதியாக சொல்வேன் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
 
இந்த படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இங்கு வர முடியவில்லை. இது திடீரென திட்டமிட்ட விழா, இசையமைப்பாளருக்காக தான் இந்த விழாவையே நடத்தியிருக்கிறோம். தனி ஒருவன் படத்தை ஆதியின் பின்னணி இசைக்காகவே 5 முறை பார்த்தவன் நான். எல்லா நடிகர்களையும் தேர்வு செய்து முடித்த பிறகு இயக்குனர் அஜய், நிறைய செலவு பண்ணிட்டீங்க, சின்ன இசையமைப்பாளரே போதும் என்றார். நான் தான் பரவாயில்லை என்று சொல்லி, ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்தேன். தனி ஒருவன் பட்த்துக்கு பிறகு ஆதியின் மிகப்பெரிய கமெர்சியல் ஹிட் ஆக இது இருக்கும். ராஷி கண்ணா படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு எங்களுக்காக இங்கு வந்திருக்கிறார். அவரை போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு பிறகு அதர்வாவை வைத்து வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக படம் பெரிதாகி கொண்டே போனது. நயன்தாரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கதைக்காக முடியை வெட்டி, தனது தோற்றத்தை மாற்றி மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். வில்லன் கதாபாத்திரத்துக்கு கௌதம் மேனன் சார் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அனுராக் காஷ்யாப் நடித்த அகிரா படத்தை பார்க்க நேர்ந்தது. அவரை அணுகினோம், அவரும் ஒப்புக் கொண்டார். நானும் பெரிய ஆர்டி ராஜசேகர் ரசிகன், அவரை உள்ளே கொண்டு வந்தோம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அதை விஜய் சேதுபதி மட்டுமே செய்ய முடியும். அவர் கதாபாத்திரம் தான் கதையின் முக்கியமான விஷயம். 15 நிமிடம் வந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார். ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கணும்னு தான் இவ்வளவு தாமதம். திரில்லர், எமோஷன், ஆக்‌ஷன் விரும்புபவர்கள் என எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். தனது பட வேலைகளுக்கு நடுவிலும் அனுராக் காஷ்யாப் சாருக்கு டப்பிங் பேசிக் கொடுத்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயகுமார். 
 
துப்பாக்கி படத்தில் அஜயும், நானும் முருகதாஸ் சாரிடம் ஒன்றாக வேலை செய்தோம். படத்தில் ஒரு விஷயம் சரியில்லை என்றாலும் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவர் அஜய் என்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
 
நான், விஜய், முருகதாஸ் மூவரும் டிமாண்டி காலனி படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். அப்போதே விஜய் இந்த இயக்குனரை வைத்து படம் பண்ணுங்கனு என்று என்னிடம் சொன்னார். நல்ல திறமையான ஒரு இயக்குனர். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துரைக்கிறார் இயக்குனர். சின்ன படத்தை பெரிய படமாக்கியது தயாரிப்பாளர் ஜெயகுமார். ஹிப் ஹாப் தமிழா ஆதி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதன், இசையமைப்பாளர் என்றார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.
 
இமைக்கா நொடிகள் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் மிக முக்கியமான படம். தனது சக்திக்கும் மீறி, ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தை தயாரித்திருக்கிறார் ஜெயகுமார். படத்தில் பின்னணி இசை தான் ஹீரோ, இந்த படத்துக்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். பாடல்களை தாண்டி ருத்ரா என்ற தீம் இசை ஹைலைட்டாக இருக்கும். மகிழ் திருமேனி சார் தான் அனுராக் காஷ்யாப் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசுவார் என ஆரம்பத்திலேயே தனக்குள் முடிவு செய்து விட்டார். படத்துக்காக தான் நினைத்ததை செய்து முடிப்பவர் அஜய் என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
 
விழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் ரமேஷ் திலக், உதயா, நடிகை ரெபேக்கா, தயாரிப்பாளர்கள் மதன், கதிரேசன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், , இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மனோஜ்குமார், பிரவீன் காந்தி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டண்ட் மாஸ்டர் 'ஸ்டன்' சிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE