நடிகர் சூர்யா பேசும்போது
அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாக கேட்க முடியவில்லை. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.
யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.
சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார்.
என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து எடுங்கள் என்றார்.
இயக்குநர் செல்வராகவன் பேசும்போது
இந்த கதையின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போதே சூர்யா தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. நடிப்பில் மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் சிறு சிறு விஷயங்களைக் கூட கூர்மையாக கவனித்து பேசுவார். சூர்யா இயக்குநரின் நடிகர். அவர் எனக்கு கிடைத்தது வரம். சாய்பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு சொல்வதைக் கேட்கும் திறமையான நடிகை என்று கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது
செல்வராகவனுடன் பல படங்கள் பணியாற்றியிருக்கிறேன். மேலும், அவர் கதை கூறும்போதே அதன் முக்கியத்துவத்தையும் கூறுவார். ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் சிறு சிறு விஷயங்களையும் எப்படி பண்ணலாம் என்று ஆராய்ச்சி செய்வோம். அதேபோல், இப்படத்திலும் பணியாற்றியிருக்கிறோம் என்றார்.
சாய்பல்லவி பேசும்போது
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவி போல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் செல்வேன். ஆனால் இப்படத்தில் நான் தயார்படுத்திக் கொள்வது தேவையில்லை என்று உணர்ந்தேன். இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக் கொள்ள போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வராகவன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் செல்வராகவன் வல்லவர். சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.