சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள்.
தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி.
மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட ரேவதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.
இவர்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சத்யன், இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இளமை துள்ளலுடன் படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார். நடனம், காமெடி, முக பாவனைகள் அனைத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே இளமையான பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவதும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை அவர்களுக்கு உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர்.
கதாபாத்திரங்களை தேர்வு செய்ததிலேயே முதல் வெற்றியை பெற்றிருக்கிறார் இயக்குனர் கல்யாண். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்தே படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களிடமும் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். காமெடி காட்சிகளும், வசனங்களும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதையை தோய்வில்லாமல் கையாண்ட விதம் சிறப்பு.
மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ப்ரஸ்சாக இருக்கிறது.