இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற 60 வயது முதியவராக வரும் சிவாஜி ஒரு அடுக்கக காவலாளியாக இருக்கிறார். அந்த அடுக்ககத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்படுகிறார். நான்கு வடமாநில இளைஞர்களுடன் சேர்ந்து ஐந்தாவது ஆளாக அவரும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டார் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு.பள்ளிக்கூட டீச்சர் சாய் பல்லவி (கார்கி) வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்புகிறார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக இருக்கும் தனது தந்தையை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்ப தாக அறிந்து தந்தையை அழைத்துவர போலீஸ் நிலையம் செல்கிறார். அங்கு மற்றொரு அதிர்ச்சி அவரை நிலைகுலைய வைக்கிறது. சிறுமி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டதை யறிந்து பதறுகிறார் கார்கி. தனது தந்தை மீது பொய் குற்றச்சாட்டு சொல்வதாக கூறி அவரை விடுவிக்க கேட்கிறார். ஆனால் தந்தையை பார்க்கக்கூட விடாமல் கார்கியை போலீஸ் துரத்தி யடிக்கிறது. சட்டப்படி கோர்ட்டில் தனது தந்தை மீதான பழியை துடைத்து அவரை விடுவிக்க முடிவு செய்கிறார். குடும்ப நண்பரான வக்கீல் ஜெயப்பிரகாஷ் இந்த வழக்கில் வாதாட முடிவு செய்கிறார். ஆனால் வக்கீல் சங்கம் விதித்த தடையை ஏற்று வழக்கில் வாதாட மறுத்துவிடு கிறார். என்னசெய்வதென்று தெடியாமல் தவிக்கும் கார்கிக்கு உதவ முன்வருகிறார் ஜெயபிரகாஷிடம் ஜூனியராக இருக்கும் காளி வெங்கட். சாய்பல்லவி அதை ஏற்று வழக்கு நடத்துகிறார். மீளவே முடியாது என்று பலர் சொன்னாலும் காளி வெங்கட் சாமர்த்தியமாக வாதாடி சாய் பல்லவி தந்தையை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். கதை இத்தோடு முடியவில்லை. மீண்டும் வழக்கு நடக்கிறது. அதில் தந்தை நிரபராதியாக வெளியில் வரும் சூழலில் திடீர் திருப்பம் நடக்கிறது. அதில் கார்க்கி எடுக்கும் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸின் ஹைலைட். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை, இதுவரை சொல்லப்படாத, முற்றிலும் வேறு கோணத்தில் சொல்லத் துணிந்த இயக்குனர் கவுதம் ராமச்சந்திரனை எத்தனை பாராட்டினாலும் தகும். இம்மி பிசகினாலும் ஆபாசமும் அருவருப்பும் ஏற்பட்டுவிடக் கூடிய இடங்கள் பல இருந்தாலும், அவற்றை எல்லாம் கம்பியில் நடப்பது போல் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து நீட்டான படமாக இதை படைத்தளித்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் இன்னும் அருமையான படங்களை இவரிடம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ‘கார்கி’ மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்.தன் கணவனைக் காப்பாற்ற கண்ணகி போராடியது போல் தன் தந்தையைக் காப்பாற்ற இந்த கார்கி போராடுவதிலும் இலக்கியச் சுவையை உணர முடிகிறது. ஆனால், கண்ணகியும் செய்யத் துணியாத காரியம் கடைசியில் கார்கி செய்வது.எப்படிப்பட்ட ரசனை உள்ளவர்களும் ஒட்டு மொத்தமாகப் பாராட்டும் படைப்புகளில் இந்த கார்கியும் ஒன்று. இந்த வருட தமிழ் சினிமாவின் டாப் 3 படங்களை பட்டியலிட்டால் அந்த மூன்று இடங்களில் ஒரு இடம் ‘கார்கி’க்காக ஒதுக்கப்படும்.
