நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் 'ழகரம்.'
பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில் ,நந்தா நடிப்பில் , தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த 'ழகரம்' திரைப்படம் .பல விருதுகளைப் பெற்ற ' ப்ராஜெக்ட் ஃ' நாவலின் தழுவல் இது. இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதால் இந்தத் திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர். ''அடுத்து என்ன நடக்கப் போகிறது?'"என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்கிறது கதை.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர், கவுதம் மேனன் வெளியிட்டார். ட்ரைலர் கிறிஸ்துமஸ் தினத்தன்று அதாவது இன்று வெளியாக உள்ளது .