சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ இதில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாகஆஷ்னாசவேரிநடிக்கிறார். மற்றும்ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
விமல் ‘அந்த’ விஷயத்தில் மச்சக்கார ஆசாமி. அழகானபெண்ணோ அம்சமான ஆன்டியோ எவர் கிடைத்தாலும் பவர் காட்டுகிறார்.இவருக்கு ஒரு லவ்வர்; அவரும் இவரிடம் காட்டுக் காட்டென HOTடுகிறார். இது ஒரு டிராக்கில் நிகழும் சதை. மன்னிக்கவும் கதை.
விமலும் சிங்கம்புலியும் தாங்கள் பார்க்கும் வேலையில் சம்பளம் பத்தவில்லை என்பதால் சோப்பு, சீப்பு, கண்ணாடி, காண்டம் என கண்டதையும் களவாண்டு பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஊர் இன்ஸ்பெக்டரின் பெரிய வீட்டிலிருந்து ஐந்து லட்சம், சின்ன வீட்டிலிருந்து ஐந்து லட்சம் என கனமாக கைவைத்து கண்டத்தில் சிக்குகிறார்கள். இவர்களை சப் இன்ஸ்பெக்டர் பூர்ணா துரத்தித் துரத்தி வெளுக்கிறார். இது கதையின் இன்னொரு டிராக்…
விமல் லண்டனில் வேலைக்குப் போகிறார். அந்த ஊரில் ஒரு மாடர்ன் மங்காத்தா விமலின் ஆண்மையை யானை பலத்தோடு சுருட்டிச் சுவைத்து சக்கையாய் பிழிகிறது. ‘ஆழம் பாத்தது போதும், யப்பா சாமி ஆளைவிடு’ என நம்மூருக்கு ஓடிவருகிற விமலை துரத்திக் கொண்டே வருகிறது அந்த லண்டன் லட்டு. கதையில் இதுவும் ஒரு டிராக்…
விமலும் சிங்கம் புலியும் எதையெதையோ திருடியதில் அந்த ஊரின் பெரிய தாதா ஆனந்த்ராஜின் ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருள் ஒன்று அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் கைக்கு வந்து சேர்கிறது. அதை கைப்பற்ற ஆனந்த்ராஜ் அன்ட் கோ வெறியாய்த் துரத்துவது கதையின் மற்றொரு டிராக்…
இத்தனை கதையிருந்தும் படம் பார்த்து முடித்தபின் ‘படத்துல கதையே இல்லையே’ என்ற ஃபீலிங் வருகிற அளவுக்கு திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்!
ஒரே அடியில் பத்து பேரை பந்தாடுவது, கன்டெய்னரை காலால் எத்தி காயலான் கடைச் சரக்காக்குவது போன்ற ஹீரோயிஸத்துக்கெல்லாம் வாய்ப்பில்லாத கேரக்டர் விமலுக்கு. அதற்குப் பதிலாக பிளேபாயாக புகுந்து விளையாடியிருக்கிறார். ஆஷ்னா சவேரியுடனாக காதல் சவாரியும் அந்த ஒற்றைப் பாட்டும் அநியாயத்துக்கு அசைவம்!