போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புதிதாக பணிக்கு வருகிறார் எஸ்.ஐ. ஜெய் பாலா. அன்று அவரின் காதலியான காவியா பெல்லுவுக்கு பிறந்த நாள் என்பதால் அனைவரும் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்க. கான்ஸ்டபிளாக இருக்கும் சார்லி கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? அந்த கொலையின் பின்னணி என்பதை கண்டறிய, இரண்டாம் பாதியில் களமிறங்குகிறார் கிஷோர். மர்மமான அந்த கொலையை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை…
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது டிராமா. பெயருக்காக எடுக்காமல் சின்சியர் உழைப்புடன் இயக்கி யிருப்பது சஸ்பென்ஸான கதையின் கிளைமாக்ஸ் உணர்த்துகிறது.ஸ்ட்ரிக்டான காவலராக வரும் சார்லி, அவர்தான் படத்தில் நடக்கும் குற்றச்சம்பவத்தின் மையப்புள்ளி. சீனியர் சீனியர் தான் என்று சொல்லுமளவிற்கு, கச்சிதமாக நடித்திருக்கிறார்.ராஜபாண்டியாக வருபவரும் அற்புதம், கிஷோரின் உதவியாளராக வரும் திருநங்கையும் கம்பீரமாக நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார்.கிஷோர் விசாரணையை தொடங்கியவுடன் பரபரப்பும் தொற்றிக்கொள்கிறது. அவரது மிரட்டலும் உருட்டலும் மட்டுமல்ல அவருக்கு உதவியாக வரும் திருநங்கையின் மிரட்டலான நடவடிக்கைகளும் காட்சியை வேகப்படுத்துகிறது. இவர்தான் கொலையாளி என்று தெரிய வரும்போது புருவங்கள் அதிர்ச்சி ஆச்சர்யத்தால் உயர்கிறது.இரண்டாம் பாதியில் வரும் கிஷோர், கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. கதைச்சுமையை அவரே தாங்கியிருந்தால் படம் கூடுதல் சிறப்பாக வந்திருக்குமோ என்று படம் பார்க்கும் அனைவர்க்கும் தோன்றும்.
