5.4 C
New York
Monday, March 24, 2025

Buy now

spot_img

Director Raju Murugan special interview about the film “Japan”

இயக்குனர் ராஜு முருகன் ஜப்பான் திரைப்படம் பற்றி சிறப்பு பேட்டி

இந்தப் படம் எப்படி உருவானது?

இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

முதலில் இந்த ஜப்பான் கதாபாத்திரம் அவருக்கான சரியான கதாபாத்திரமாக திரைக்கதையில் அமைந்துவிட்டது. திரைக்கதையைப் படித்தவுடன் இந்த இந்த இடங்களில் இந்த கதாபாத்திரம் என்னை ஈர்த்துவிட்டது என்று கார்த்தி சொன்னார். அப்போது அவர் இந்தக் கதைக்குள் வந்துவிட்டார். தொடர்ந்து இந்தக் கதாபாத்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பல உரையாடல்கள் எங்களுக்குள் இருந்தன.

அவருக்கும் பல பார்வைகள் உள்ளன. ஒரு நாயகன், நடிகர் என்பதைத் தாண்டி அவர் அடிப்படையில் முதலில் உதவி இயக்குநராக இருந்தவர் இல்லையா. எனவே அடிப்படையில் அவருக்கு திரைக்கதை பற்றிய புரிதல் அதிகம். அது எனக்கும் உதவியாக இருந்தது. அப்படி அந்தக் கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாகக் கொண்டு சென்றோம். இது முழுக்க முழுக்க ஜப்பான் என்கிற கதாபாத்திரத்தை ஒட்டிய படம்.

அதில் ஜனரஞ்சக ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு, குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் என எல்லாமே இருக்கும். அதே நேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அதை என்றுமே நான் தவற விட முடியாது. அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார். எனவே இது கார்த்தி - ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம். எங்களின் கூட்டு முயற்சி என்று கூட சொல்லலாம்.

இப்படி அமைவது எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனென்றால் இது கார்த்தியின் 25வது படம். அதை இயக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறார். அவை வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாகக் கண்டிப்பாக ஜப்பான் இருக்கும்.

ஜப்பான் கதாபாத்திரத்தின் தோற்றம் மிக மிக வித்தியாசமாக இருக்கிறது. இந்தத் தோற்றம் தான் வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

இப்படியான கதாபாத்திரம் அமைந்துவிட்டதால் அது இப்படி இருக்கலாமா என்று கேட்டு பல ஒப்பனை, ஆடைகள் என்று யோசனைகளை கார்த்தியே மெனக்கெட்டு அடிக்கடி வாட்ஸ் அப்பில் அனுப்புவார். கடைசியில் பேசும் விதம் வரைக்கும் மாறியது. ஏனென்றால் 24 படங்கள் நடித்தாகிவிட்டது. எப்படி பேசினாலும் கார்த்தி என்கிற அந்த பிம்பம் கண் முன்னே வந்துவிடும். எனவே வேறு விதமாகப் பேசுகிறேன் என்று அவரே சொன்னார். அது எப்படி இருக்கலாம் என்று நிறைய யோசித்தோம். ஒரு கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற அவரது மெனக்கெடல், உழைப்பு எனக்குமே கூட இது பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது.

ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்.

இயக்குநர்களிடம் அதிக கேள்விகள் கேட்பேன் என்று கார்த்தி சொல்லியிருக்கிறார். உங்களிடமும் கேட்டாரா?

அவர் கேட்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும். திரைக்கதையை மேம்படுத்தத்தான் கேட்பார். ஒரு தொழில்நுட்பக் கலைஞரோ, நடிகரோ ஒரு படத்தில் பணியாற்ற முன் வரும்போது அவர்களுக்கு அந்தப் படத்தைப் பற்றிய ஒரு மதிப்பீடு இருக்கும். சிலர் இந்தக் கதைக்கு இவ்வளவு தான் பணியாற்ற வேண்டும் என்கிற முன் முடிவோடு வருவார்கள். அப்படி வருபவர்களிடமிருந்து அவர்கள் நினைத்த அளவுக்கு மேல் நம்மால் ஒரு உழைப்பை வாங்கவே முடியாது.

இயக்குநர் நம்பும் ஒருவரிடமிருந்து தேவையான உழைப்பு வரவில்லையென்றால் அது இயக்குநருக்கு மிகப்பெரிய வலியைத் தரும். அப்படியான அனுபவங்கள் எனக்கு இருந்திருக்கிறது. ஆனால் கார்த்தியைப் பொருத்தவரை எப்போதுமே நினைத்ததை விட அதிக உழைப்பைத் தர வேண்டும் என்றே நினைப்பார். அதுதான் அவரிடமிருந்து கேள்விகளாக வரும். எனக்கு அது ஆரோக்கியமான விஷயமாகவே தெரிந்தது.

பாலிவுட்டில் அவ்வளவு படங்களில் முத்திரை பதித்த ரவிவர்மன் தமிழில் சில படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் எப்படி இந்தப் படத்தில் இணைந்தார்?

ரவிவர்மன் சார் மிக சீரியஸான நபர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அவர் மிக உற்சாகமாக இருந்தார். நான் அதிகம் சிரித்து வேலை செய்தது இந்தப் படப்பிடிப்பில்தான் என்று அவரே சொன்னார். மேலும் இந்தக் கதை நம் மண் சார்ந்தது. கதாபாத்திரமும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவன். இதை சர்வதேச ரசிகர்களுக்கும் போய் சேரும் வகையில் எடுக்க நினைத்தோம். அதற்கு ரவி வர்மனின் ஒளிப்பதிவு, யோசனைகள் உதவியது.

தயாரிப்பாளர் பற்றிச் சொல்லுங்கள், கதையைக் கேட்டு அவர் என்ன சொன்னார்?

பிரபு, பிரகாஷ் என இருவரிடமும் எனக்கு நீண்ட கால நட்பு உள்ளது. திரைக்கதையைப் பற்றி அவர்கள் அறிவும், புரிதலும் அபாரமானது. எனது எல்லா திரைக்கதைகளையும் அவர்களிடம் நட்பு ரீதியாக பகிர்ந்து அவர்களின் கருத்தைக் கேட்பேன். பொதுவாக தயாரிப்புக்கென அவர்களிடம் ஒரு கதை கொடுத்தால் பதில் தெரிய குறைந்தது 1 மாதமாவது ஆகும். மொபைலை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
முதலில் நான் கார்த்திக்காக வேறொரு கதையைக் கொடுத்தேன். அது தேர்வாகவில்லை. பிறகு எதேச்சையாக இந்தக் கதையைக் கொடுத்தேன். மறு நாளே பிரகாஷ் என்னை அழைத்து மிகவும் நன்றாக இருப்பதாகச் சொன்னார். உடனே கார்த்திக்கு அந்தக் கதை சென்றது. அவரும் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று சரி சொன்னார். உடனே எல்லாம் நடந்து விட்டது.

தீபாவளி அன்று படம் பார்க்க வரும் ரசிகர்களுக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சினிமாவுக்காக நாங்கள் கஷ்டப்பட்டோம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். கலை என்பது அனைவரும் உற்சாகமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றும் விஷயம். நாங்களும் அப்படித்தான் பணியாற்றியிருக்கிறோம். எனக்கு தனிப்பட்ட முறையில் இனிமையான அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் நிச்சயமாக அப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். கார்த்தியை பிடிக்கும் அனைவருக்கும் அவரை புதுவிதமான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE